ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக மதன்லால், கவுதம் கம்பீர் நியமனம்: பிசிசிஐ தகவல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஆலோசனைக் குழு உறுப்பினர்களாக மதன்லால், கவுதம் கம்பீர் நியமனம்: பிசிசிஐ தகவல்

மும்பை: இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) கிரிக்கெட் ஆலோசனைக் குழு (சிஏசி) உறுப்பினர்களாக முன்னாள் வீரர்கள் மதன்லால், கவுதம் கம்பீர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பெண் உறுப்பினராக மும்பையின் சுலக்ஷனா நாயக் நியமிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வௌியாகி உள்ளது.

சிஏசி-யானது தேர்வுக் குழுக்களை தேர்வு செய்வதற்கான அதிகாரம் கொண்டது. கடந்த காலங்களில் டெண்டுல்கர், லஷ்மண், கங்குலி ஆகியோர் இடம் பெற்றிருந்தாலும், இரட்டை ஆதாயப் பதவி புகார் எழுந்ததால் மூவரும் விலகினர்.

இவர்களுக்கு பின், பயிற்சியாளர்களை தேர்வு செய்ய கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.

இவர்களும் இரட்டை ஆதாய பதவி விவகாரத்தால் ராஜிநாமா செய்தனர்.

தற்போது கங்குலி பிசிசிஐ தலைவராக நியமிக்கப்பட்ட நிலையில் புதிய சிஏசி உறுப்பினர்களாக மதன்லால், கவுதம் கம்பீர், பெண் தரப்பில் சுலக்ஷனா நாயக் ஆகியோா் பொறுப்பேற்க உள்ளனர். 2020 முதல் அடுத்த நான்கு ஆண்டு சுழற்சிக்கான தேர்வுக் குழுக்களைத்  தேர்ந்தெடுக்கும் ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்களாக இவர்கள் செயல்படுவர்.

ஏற்கனவே, பிரசாத், ககன் கோடா, சரண்தீப் சிங், தேவங்க் காந்தி, ஜதின் பராஞ்சிபே உள்ளிட்டோர் சீனியர் அணி தேர்வுக் குழு உறுப்பினர்களாக உள்ள நிலையில், 4 ஆண்டுகளுக்கான புதிய தேர்வு குழு நியமிக்கப்பட உள்ளது. ஜூனியர் தேர்வுக் குழுவிலும் மாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புள்ளது.


.

மூலக்கதை