ஹாரி - மேகன் பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம்

தினகரன்  தினகரன்
ஹாரி  மேகன் பிரச்னைக்கு தீர்வு காண இங்கிலாந்து ராணி இன்று அவசர கூட்டம்

லண்டன்: இங்கிலாந்து அரசு குடும்பத்தில் இருந்து விலகுவதாக இளவரசர் ஹாரி - மேகன் தம்பதி அறிவித்துள்ள பிரச்னைக்கு தீர்வு காண, ராணி எலிசபெத் இன்று தனது குடும்பத்தின் அவசர கூட்டத்தை கூட்டியுள்ளார். உலகின் பெரும்பாலான பகுதிகளை தன் ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த நாடு இங்கிலாந்து. அதன் காலனி ஆதிக்கத்தில் இன்னமும் கூட சில பகுதிகள் உள்ளன. அந்நாட்டில் அரச குடும்பத்தினர், அரசின் முதன்மை உறுப்பினர்களாக கருதப்படுகின்றனர். அரசியின் ஒப்புதலின் பேரில்தான் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளும். இங்கிலாந்து அரசு குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினர்களும், அதிகாரம் பெற்ற இளவரசர், இளவரசிகளாக கருதப்படுகின்றனர்.இப்போது பட்டத்து ராணியாக இருக்கும் இரண்டாம் எலிசபெத்தின் மகனும் இளவரசருமான சார்லஸ் - டயானா தம்பதிக்கு பிறந்த குழந்தைகள் ஹாரி, வில்லியம். டயானா எவ்வளவு புகழ் பெற்றாரோ அதே அளவுக்கு புகழ்பெற்றவர் ஹாரி. இவர் ராணுவத்தில் சத்தமில்லாமல் ஒரு வீரராக பணியாற்றி மக்களின் மனதை கவர்ந்தவர். ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போர் நடந்தபோது, சற்றும் அஞ்சாமல் அங்கு அவர் போர்க்களத்தில் பணியாற்றியது குறிப்பிடத்தக்கது.இ்நநிலையில், இளவரசர் ஹாரி தனது காதலியான ஹாலிவுட் நடிகை மேகன் மார்க்கலை கடந்த 2018ம் ஆண்டு மே 19ம் தேதி திருமணம் செய்து கொண்டார். ஹாரியை போலவே மேகனும், ஏழைகளுக்கு உதவுவதில் பெரும் ஆர்வம் கொண்டவர். இதனால், தனது மாமியார் டயானாவை போல் அவரும், பாதுகாப்பு பற்றி எல்லாம் கவலைப்படாமல் பல நாடுகளுக்கு சென்று ஏழைகளுக்கு நிதி திரட்டி அவர்களுக்கு உதவியவர் என்ற பெருமை பெற்றவர். தனது மனைவியின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஹாரி ஆதரவாக இருந்தார். இவர்களுக்கு தற்போது ஒரு குழந்தைஉள்ளது. தற்போது ஹாரி, இங்கிலாந்து அரச குடும்பத்தில் மூத்த உறுப்பினர் என்ற பொறுப்பில் இருக்கிறார். அவரது மனைவிக்கும் இந்த அந்தஸ்து உண்டு. இந்நிலையில், அரச குடும்பத்தினர் மூத்த உறுப்பினர் என்ற பதவியில் இருந்து விலகுவதாக ஹாரியும், மேகனும் சில தினங்களுக்கு முன் கூட்டாக அறிவித்தனர். அரச குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மனக்கசப்பால் ஹாரி இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இங்கிலாந்தில் பெரும் பரபரப்பு நிலவுகிறது. இந்நிலையில், ஹாரி - மேகன் தம்பதியின் இந்த முடிவு குறித்து ஆலோசிப்பதற்காக ராணி இரண்டாம் எலிசபெத் நேற்று தனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் இன்று அரண்மனைக்கு வருமாறு அழைத்திருந்தார். இதில் சார்லஸ், இளவரசர்கள் ஹாரி, வில்லியம் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் தற்போது கனடாவில் சுற்றுப்பயணத்தில் உள்ள மேகன், போன் மூலம் இந்த ஆலோசனையில் கலந்து கொள்வார் என்று அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன. அரண்மனை பொறுப்பில் இருந்து விலகும் ஹாரி, தங்களுக்கு என்று ஒரு வேலையை உருவாக்கிக் கொண்டு அதில் உழைத்து சாப்பிடப் போவதாகவும் தெரிவித்துள்ளதாக அரண்மனை வட்டாரங்கள் கூறுகின்றன.* கனடா பிரதமருக்கு முன்கூட்டியே தெரியும்இளவரசர் ஹாரி - மேகன் தம்பதியின் அதிரடி முடிவு, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு முன்கூட்டியே தெரியும் என்று கூறப்படுகிறது. ஏனெனில், சமீபத்தில் அவர் இங்கிலாந்து அரச குடும்பம் குறித்து சூசகமாக பேட்டி ஒன்றில் கூறியிருந்தார். மேலும், தற்போது அவர் அளித்துள்ள பேட்டியில், ‘‘இளவரசர் ஹாரி - மேகனை கனடாவுக்கு வருமாறு அழைக்கிறேன்’’ என்று அழைப்பு விடுத்துள்ளார்.* மனைவிக்காக வேலை கேட்ட இளவரசர்சமீபத்தில் லண்டனில் ஹாலிவுட் திரைப்படமான, ‘தி லயன் கிங்’ திரையிடப்பட்டது. அப்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான டிஸ்னியின் தலைவர் பாப் இகர் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் பேசிக் கொண்டிருந்த ஹாரி, தன் மனைவி மேகன் மீண்டும் பின்னணி குரல் கொடுக்க விரும்புகிறார் என்றும், இதனால் அவருக்கு ஏதாவது வாய்ப்பு இருந்தால் தாருங்கள் என்றும் பாப் இகரிடம் கேட்டுக் கொண்டார். அதை பரிசீலிப்பதாக பாப் இகர் தெரிவித்துள்ளார். இளவரசர் தன்னிடம் கிண்டல்தான் செய்கிறார் என்று ஆரம்பத்தில் பாப் இகர் நினைத்துள்ளார். ஆனால், தற்போதுதான் உண்மையிலேயே அவர் மனைவிக்காக வேலை கேட்டுள்ளார் என்று தெரியவந்துள்ளது.

மூலக்கதை