பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: 20 பேர் படுகாயம்

தினகரன்  தினகரன்
பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழப்பு: 20 பேர் படுகாயம்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் மசூதியில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். பாகிஸ்தானில் பலுசிஸ்தான் மாகாணத்தின் தலைநகர் குவட்டாவில் உள்ள மசூதியில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டு தொழுகை செய்து கொண்டிருந்தனர். அப்போது மசூதிக்குள் பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் அந்த பகுதியே அதிர்ந்தது. குண்டு வெடிப்பில் சிக்கி 15 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 20 பேர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து, மசூதியை சுற்றிவளைத்து பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். பின்னர் அவர்கள் படுகாயம் அடைந்த நபர்கள் அனைவரையும் மீட்டு ஆம்புலன்சுகளில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது. இதற்கிடையே மசூதியில் நடந்த குண்டுவெடிப்புக்கு ஐ.எஸ். பயங்கரவாத இயக்கம் பொறுப்பு ஏற்றுள்ளது. முன்னதாக கடந்த செவ்வாய்கிழமை குவட்டா நகரில் உள்ள பரபரப்பான சந்தையில் மோட்டார்சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்து சிதறியதில் 2 பேர் பலியானது நினைவுகூரத்தக்கது.

மூலக்கதை