பந்துவீச்சாளர்களின் மாயாஜாலத்தால் 123 ரன்னில் சுருண்டது இலங்கை: டி20 தொடரை வென்று இந்தியா அபாரம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
பந்துவீச்சாளர்களின் மாயாஜாலத்தால் 123 ரன்னில் சுருண்டது இலங்கை: டி20 தொடரை வென்று இந்தியா அபாரம்

புனே: இலங்கை அணியுடனான 3வது மற்றும் கடைசி டி20 போட்டியில், 78 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதியது.

கவுகாத்தியில் நடக்க இருந்த முதல் போட்டி கனமழை காரணமாக கைவிடப்பட்ட நிலையில், இந்தூரில் நடந்த 2வது போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-0 என முன்னிலை பெற்றது. இந்த நிலையில், புனேவில் நேற்று இரவு நடந்த 3வது போட்டியில், டாசில் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீசியது.

ராகுல், தவான் இருவரும் இந்திய இன்னிங்சை தொடங்கினர். அதிரடியாக விளையாடிய இருவரும் முதல் விக்கெட்டுக்கு 10. 4 ஓவரில் 97 ரன் சேர்த்தனர்.

தவான் 52 ரன் (36 பந்து, 7 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி சந்தகன் பந்துவீச்சில் குணதிலகா வசம் பிடிபட்டார். அடுத்து வந்த சாம்சன் சந்தித்த முதல் பந்தை சிக்சராகப் பறக்கவிட்டாலும், அடுத்த பந்திலேயே விக்கெட்டை பறிகொடுத்தார்.

ராகுல் 54 ரன் (36 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து சந்தகன் பந்துவீச்சில் ஸ்டம்பிங் செய்யப்பட்டார்.

ஷ்ரேயாஸ் 4 ரன் எடுத்து வெளியேற, இந்திய அணி 12. 5 ஓவரில் 122 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்று தடுமாறியது. 13 பந்தில் 4 விக்கெட் சரிந்த நிலையில் மணிஷ் - கோஹ்லி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 42 ரன் சேர்த்தது.

கோஹ்லி 26 ரன் (17 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட்டானார். அவர் 1 ரன் எடுத்தபோது கேப்டனாக சர்வதேச போட்டிகளில் 11,000 ரன் என்ற மைல்கல்லை எட்டியது குறிப்பிடத்தக்கது.

அடுத்து வந்த சுந்தர் முதல் பந்திலேயே கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். கடைசி கட்டத்தில் பாண்டே, தாகூர் அதிரடியில் இறங்க ஸ்கோர் எகிறியது.

இந்தியா 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 201 ரன் குவித்தது. பாண்டே 31 ரன் (18 பந்து, 4 பவுண்டரி), தாகூர் 22 ரன்னுடன் (8 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இலங்கை பந்துவீச்சில் சந்தகன் 3, லாகிரு, ஹசரங்கா தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 202 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இலங்கை அணி களமிறங்கியது.

இந்திய வீரர்களின் துல்லியமான பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் முன்னணி வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுக்க, இலங்கை 5. 1 ஓவரில் 26 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து திணறியது. மேத்யூஸ் - தனஞ்ஜெயா இணைந்து 5வது விக்கெட்டுக்கு பொறுப்புடன் விளையாடி ஓரளவுக்கு தாக்குப்பிடித்தாலும், அவர்களுக்கு பின்னால் வந்த வீரர்கள் யாரும் நிலைத்து நின்று விளையாட தவறினர்.

இதனால் இலங்கை அணி 15. 5 ஓவரில் 123 ரன்னுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது. இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் 2-0 என கைப்பற்றியது.

இந்திய பந்துவீச்சில் நவ்தீப் சைனி 3, வாஷிங்டன் சுந்தர் மற்றும் ஷர்துல் தாகூர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். ஆட்டநாயகனாக ஷர்துல் தாகூரும், தொடர் நாயகன் விருதை நவ்தீப் சைனியும் தட்டிச்சென்றனர்.

கோஹ்லியின் 11,000, பும்ராவின் 53

* சர்வதேச டி20 போட்டியில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை வேகப்பந்து வீச்சாளர் பும்ரா பெற்றுள்ளார்.

45 போட்டிகள் ஆடியுள்ள பும்ரா 53 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். 2வது இடத்தை அஸ்வின் 52, சகால் 52, மூன்றாவது இடத்தை புவனேஸ்வர் குமார் 41 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார்.

* இந்த போட்டியில் களம் இறங்கிய இந்திய கேப்டன் கோஹ்லி 2 பவுண்டரிகள் அடித்ததன்மூலம் டி20 போட்டியில் அதிக பவுண்டரிகள் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

2வது இடத்தில் ரோகித் சர்மா 234, 3வது இடத்தில் அயர்லாந்தின் பால் ஸ்டெர்லிங் 233 பவுண்டரிகளும் அடித்துள்ளனர். இதேபோல், கேப்டனாக 11,000 ரன்களை கடந்த 6வது கேப்டனாக விராட் கோஹ்லி பெற்றுள்ளார்.

19 தொடரில் தோல்வி

இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட், ஒருநாள், டி20 போட்டி என கடைசியாக விளையாடிய 19 தொடரிலும் தோல்வியை தழுவி உள்ளது.

5 ஆண்டுக்கு பின் சாம்சன்

இந்திய அணி விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சன் கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 19ல் ஜிம்பாப்வேக்கு எதிராக டி20ல் அறிமுகமானார்.

அதன்பின், அவர் ஒரு சில தொடர்களில் எடுக்கப்பட்டாலும், ஆடும் 11 பேரில் அவருக்கு வாய்ப்பு தொடர்ந்து மறுக்கப்பட்டு வந்தது. ஒரு வழியாக 5 ஆண்டுகளுக்கு பின் நேற்று அவருக்கு 3வதாக களமிறங்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

இதில், 6 ரன்கள் மட்டுமே எடுத்து நடையை கட்டினார்.

.

மூலக்கதை