டெஸ்ட் போட்டிகளை மாற்றக் கூடாது: எதிர்ப்பாளர்கள் வரிசையில் இயான் போத்தம், சந்தீப் பாட்டீல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
டெஸ்ட் போட்டிகளை மாற்றக் கூடாது: எதிர்ப்பாளர்கள் வரிசையில் இயான் போத்தம், சந்தீப் பாட்டீல்

மும்பை: டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களுக்கு மாற்றும் ஐசிசியின் பரிந்துரைக்கு சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி உள்ளிட்ட முன்னணி வீரர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அந்த பட்டியலில் உலகின் முன்னாள் முன்னணி கிரிக்கெட் நட்சத்திரங்கள் இயான் போத்தம், சந்தீப் பாட்டீல் போன்றோரும் இணைந்துள்ளனர். ஐந்து நாட்கள் ஆடப்பட்டு வரும் டெஸ்ட் போட்டிகளை 4 நாட்களுக்கு மாற்ற ஐசிசி பரிந்துரைத்துள்ளது.

இதனால் டெஸ்ட் போட்டியின் ஆன்மாவே சிதைக்கப்பட்டு விடும் என சச்சின் டெண்டுல்கர், விராட் கோஹ்லி உள்ளிட்ட பிரபல கிரிக்கெட் வீரர்கள், ஐசிசியின் இந்த பரிந்துரைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இங்கிலாந்தின் முன்னாள் நம்பர் 1 ஆல் ரவுண்டரான இயான் போத்தமும், இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் சந்தீப் பாட்டீல் ஆகியோரும் ஐசிசியின் இந்த பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக கேப்டவுன் நகரில் நடந்த டெஸ்ட் போட்டியில் 189 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. அந்த வெற்றிக்கு வாழ்த்துக்களை தெரிவித்து, இயான் போத்தம் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘‘சிறப்பாக ஆடியுள்ளீர்கள். மகிழ்ச்சி.

டெஸ்ட் போட்டியின் 5வது நாளில் நல்லதொரு கேம் பிளான். 5வது நாளில் எப்படி ஆட வேண்டும் என்பதற்கு இந்தப் போட்டி ஒரு எடுத்துக்காட்டு.

ஸ்டேடியமும் ரசிகர்களால் நிரம்பியிருந்ததை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.

டெஸ்ட் போட்டிகளில் ஆடுவதற்கு திறமை, உடல் திறனுடன் மனோதிடமும் மிக்க அவசியம்.

குறிப்பாக மனோதிடம் (கட்ஸ்). அதற்கு டெஸ்ட் போட்டிகள்தான் சரியான இடம்.

அதனால் டெஸ்ட் போட்டிகளில் எந்த மாற்றமும் வேண்டாம். அதை தனியாக விட்டு விடுங்கள். . . ’’ என்று தெரிவித்துள்ளார்.

1983ம் ஆண்டு முதன் முதலாக கபில்தேவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, உலகக்கோப்பையை வென்ற போது, அந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய சந்தீப் பாட்டீலும், டெஸ்ட் போட்டிகளை மாற்றக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ‘4 நாட்களில் டெஸ்ட் போட்டியா? நான்சென்ஸ். . ’ என்று சந்தீப் பாட்டீல் எடுத்த எடுப்பிலேயே குமுறியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘29 டெஸ்ட் போட்டிகளில் பொறுப்பாக ஆடியுள்ளேன். அந்த அனுபவத்தில் சொல்கிறேன்.

டெஸ்ட் போட்டி என்ற பெயரே காரணப் பெயர்தான். அது உண்மையான வீரரை பரிசோதிக்கும் போட்டி.

அதில்தான் ஒரு வீரரின் முழு திறமையும் தெரியவரும். எனவே 5 நாட்கள் நடந்தால்தான் அது டெஸ்ட். . ’’ என்று சந்தீப் பாட்டீல் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

மற்றொரு புறம் முன்னாள் கிரிக்கெட் பிரபலங்கள் மார்க் டெய்லர் (ஆஸி. ), ஷேன் வார்னே(ஆஸி. ) மற்றும் மைக்கேல் வாகன் (இங்கி. ) ஆகியோர் 4 நாட்களில் டெஸ்ட் என்ற மாற்றத்துக்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

.

மூலக்கதை