ராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணை வீசிய 24 மணி நேரத்தில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ‘கிரீன் ஜோன்’ பகுதியில் அடுத்தடுத்து குண்டுகள் பொழிந்ததால் பதற்றம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ராணுவ முகாம் மீது ஈரான் ஏவுகணை வீசிய 24 மணி நேரத்தில் அமெரிக்க தூதரகம் மீது மீண்டும் தாக்குதல்: ‘கிரீன் ஜோன்’ பகுதியில் அடுத்தடுத்து குண்டுகள் பொழிந்ததால் பதற்றம்

பாக்தாத்: ஈராக்கில் அமெரிக்க தூதரகம் அருகே ஈரான் மீண்டும் ஏவுகணை தாக்குதல் நடத்தி உள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனால் இருநாடுகளிடையே போர் மூளும் அபாயம் மேலும் அதிகரித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையின் குத்ஸ் பிரிவு தளபதி காஸ்சிம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்க படை நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார். இதற்கு அமெரிக்காவை பழி வாங்கியே தீருவோம் என ஈரான் கூறியிருந்தது.

அதே சமயம், ஈராக்கில் உள்ள அமெரிக்க படையினர் உடனடியாக வெளியேற வேண்டுமென அந்நாட்டு அரசு அறிவித்தது. ஆனால், அமெரிக்க ராணுவம் வெளியேறவில்லை.

சுலைமானி மறைவுக்கு 3 நாள் துக்கம் அனுசரிக்கப்பட்டு நேற்று முன்தினம் அவரது உடல் ஈரானில் அடக்கம் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து உடனடியாக ஈரான் பழி வாங்கும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது.

நேற்று அதிகாலை அந்நாட்டு ராணுவம் ஈராக்கின் இர்பில், அல் அஸ்சாத் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இரு தளங்களிலும் 22 ஏவுகணைகள் வீசப்பட்டதாகவும், இதில் 80 அமெரிக்க வீரர்கள் பலியாகி விட்டதாகவும் ஈரான் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில் வெள்ளை மாளிகையில் நேற்று இரவு நிருபர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: ஈரான் தாக்குதலில் அமெரிக்கர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.

வீரர்கள் அனைவரும் நலமுடன் உள்ளனர். ராணுவ தளம் மட்டும் சிறிய அளவில் சேதம் அடைந்தது.

முன்னரே எச்சரிக்கும் சாதனங்கள் உள்ளதால், நாங்கள் பாதுகாப்பாக உள்ளோம். அமெரிக்காவை மிரட்டுவதை ஈரான் நிறுத்த வேண்டும்.

அமெரிக்கர்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டது. உலகின் பெரிய பயங்கரவாதியை நாங்கள் வீழ்த்தியுள்ளோம்.

ஈரானுக்கு வலிமையான செய்தியை அமெரிக்கா அனுப்பியுள்ளது. ஹெஸ்பொல்லா பயங்கரவாதிகளுக்கு சுலைமானி பயிற்சி அளித்துள்ளார்.

ஆயிரக்கணக்கான அமெரிக்கர்களையும் அவர் கொன்றுள்ளார். அவரை எப்போதோ கொன்றிருக்க வேண்டும்.

பயங்கரவாதிகளை ஊக்குவிப்பதில் ஈரான் முன்னிலையில் உள்ளது. உள்நாட்டில் மட்டும் அல்லாமல், வெளிநாட்டிலும் பயங்கரவாதிகளை அந்நாடு ஊக்குவிக்கிறது.

இது போன்ற செயல்களை ஈரான் நிறுத்த வேண்டும். அணு ஆயுத கனவை, ஈரான் கண்டிப்பாக கைவிட வேண்டும்.

அணு ஆயுதம் வைத்திருக்க அனுமதிக்க முடியாது. அந்நாட்டின் அத்துமீறல்களை அமெரிக்கா ஒருபோதும் அனுமதிக்காது.

நான் அதிபராக இருக்கும் வரை அதனை அனுமதிக்க மாட்டேன். ஈரான் மீது மேலும் கடுமையான பொருளாதார தடைகளை விதிப்போம்.

அந்நாட்டை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும்.

முன்பை விட அமெரிக்க ராணுவம் வலிமை பெற்றுள்ளது. எங்களிடம் அதிநவீன,  வலிமையான ஆயுதங்கள் உள்ளது.

சிறந்த ராணுவம் மற்றும் தளவாடங்கள் உள்ளன.   அதற்காக, நாங்கள் அதனை பயன்படுத்த போகிறோம் என்பது அர்த்தமல்ல. ஈரானுக்கு  எதிராக ராணுவம், ஏவுகணைகளை பயன்படுத்த விரும்பவில்லை.

ஐ. எஸ். பயங்கரவாதிகளை  நாங்கள் அழித்துள்ளோம்.

இது ஈரான் நலனுக்கும் உகந்தது. உலகம் முழுவதும்  அமைதியை நிலைநாட்டவே அமெரிக்கா விரும்புகிறது.

அதற்காக உழைக்க தயாராக  உள்ளோம். அதிகளவு கச்சா எண்ணெயை நாங்கள் உற்பத்தி செய்கிறோம்.

இதனால்,  மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் எங்களுக்கு தேவையில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க  அதிபர் டிரம்ப் எங்கள் வீரர்கள் யாரும் பலியாக வில்லை என  தெரிவித்துள்ளார். ஆனால், அமெரிக்க ராணுவ முகாம் கடுமையாக சேதமடைந்துள்ளதாக  கூறப்படுகிறது.

இதனால், வீரர்கள் பலியாகி இருக்ககூடும் என்று  கூறப்படுகிறது. இந்நிலையில், டிரம்ப் பேட்டியளித்து முடித்த சில மணி  நேரங்களில் நள்ளிரவில் ஈரான் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளது.

ஈரான்  தலைநகர் பாக்தாத்தில் க்ரீன் ஜோன் எனப்படும் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதி  உள்ளது. இங்கு அமெரிக்காவின் ஏவுகணை தளம், அமெரிக்கா உள்ளிட்ட பல  நாடுகளின் தூதரகங்கள் உள்ளன.

இந்த பகுதியில் 2 முறை ஏவுகணை வீசி தாக்குதல்  நடத்தப்பட்டது. ஆனால் இந்த தாக்குதலில் உயிரிழப்பு ஏதும் ஏற்படவில்லை என  ஏஎப்பி செய்தி நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

அமெரிக்க படைகள் மீது  ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்திய 24 மணி நேரத்தில், 2வது முறையாக மீண்டும்  ராக்கெட் தாக்குதல் நடத்தி இருப்பது அமெரிக்காவை ஆத்திரமடைய வைத்துள்ளது.   இதற்கு பதிலாக அமெரிக்காவும் தாக்குதலில் இறங்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் இரு நாடுகளிடையே போர் மூளும் அபாயம்  அதிகரித்துள்ளது உலக நாடுகளை கவலையடைய செய்துள்ளது.

பாலிஸ்டிக் ஏவுகணை ஏன்?

அமெரிக்க  தளங்கள் மீது ஈரான் தாக்குதலுக்கு பயன்படுத்தியது பாலிஸ்டிக் ரக  ஏவுகணையாகும்.

இதை நீரில் இருந்தும், நிலத்தில் இருந்தும் ஏவலாம். விமான  வான்வழியை பின்பற்றி எளிதில் எதிரி நாட்டுக்குள் நுழைந்து விடும்.

யாரும்  இடைமறிக்க முடியாது. 2 ஆயிரம் கிமீ தூரம் வரை பறந்து செல்லும் திறன்  கொண்டது.

திட மற்றும் திரவ எரிபொருட்களால் இதை இயக்கலாம். ரசாயன மற்றும்  அணு ஆயுதங்களையும் இதில் நிரப்பி தாக்குதல் நடத்தலாம்.

இதனால் தான் இந்த  ஏவுகணனயை ஈரான் பயன்படுத்தியதாகவும், இந்த மாதிரி ஏவுகணகைள் தயாரிப்பில்  மத்திய கிழக்கு நாடுகளிலேயே ஈரான் முன்னிலையில் இருப்பதாகவும்  கூறப்படுகிறது..

மூலக்கதை