20ம் தேதி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடங்குமா? மெல்போர்னை மிரட்டும் ‘புஷ்ஃபயர்ஸ்’: காட்டுத்தீயின் புகை மூட்டத்தால் நிர்வாகிகள் குழப்பம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
20ம் தேதி கிராண்ட்ஸ்லாம் போட்டி தொடங்குமா? மெல்போர்னை மிரட்டும் ‘புஷ்ஃபயர்ஸ்’: காட்டுத்தீயின் புகை மூட்டத்தால் நிர்வாகிகள் குழப்பம்

சிட்னி: ஆடவர்  உலகக் கோப்பை எனப்படும் ஏடிபி கோப்பை டென்னிஸ் போட்டிகள் இத்தாலி,  ஆஸ்திரேலியா, ரஷியா ஆகிய நாடுகளுக்கு இடையே ஆஸ்திரேலியாவில் நடைபெற்று  வருகின்றன. 5ம் நாளான நேற்று பெர்த் நகரில் ரஷியா 3-0 என்ற செட் கணக்கில்  நார்வேயை வீழ்த்தியது.

ரஷிய வீரர் டேனில் மெத்வதேவ் காஸ்பர் ரூடை வென்றார்.   மற்றொரு ஆட்டத்தில் காரன் கச்சனோவ் 6-2, 6-1 என டுராஸோவிக்கை  வீழ்த்தினார். ஆஸ்திரேலியா மற்றும் கிரீஸ் அணிகள் இடையிலான  ஆட்டத்தில் உலகின் 6ம் நிலை கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸை 7-6, 6-7, 7-6 என்ற  செட் கணக்கில் ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸ் போராடி வென்றார்.

கனடா 2-1  என ஜெர்மனியையும், ஆஸ்திரேலியா 3-0 என கிரீசையும், இத்தாலி 2-0 என  அமெரிக்காவையும், பிரிட்டன் 3-0 என மால்டோவாவையும், பெல்ஜியம் 2-1 என  பல்கேரியாவையும் வீழ்த்தின. இப்போட்டியில் ரஷியா, இத்தாலி, ஆஸ்திரேலியா  அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.

இந்நிலையில், 2020ம் ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் வருகிற 20ம் தேதி முதல் பிப்ரவரி 2ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், ஆஸ்திரேலியாவின் கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டுள்ள புஷ்ஃபயர்ஸ் என்ற காட்டுத்தீயில் இருந்து வெளியேறும் புகை, ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் தாமதப்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து, ஏடிபி பிளேயர்ஸ் கவுன்சிலின் தலைவர் நோவக் ஜோகோவிச் கூறுகையில், ‘‘நிலைமை மேம்படவில்லை என்றால், போட்டியை தாமதப்படுத்துவதை அமைப்பாளர்கள் பரிசீலிக்க வேண்டும்’’ என்றார்.

ஆனால், ஆஸ்திரேலியா டென்னிஸ் தலைவர் கிரேக் டைலி, ‘‘புஷ்ஃபயர்ஸில் இருந்து வரும் புகை ஆஸ்திரேலிய ஓபனை பாதிக்குமா என்பது பற்றி நிறைய ஊகங்கள் உள்ளன. கிராண்ட்ஸ்லாம் திட்டமிட்டபடி நடத்த முடியும் என்பதை உறுதிப்படுத்துகிறோம்.

நெருங்கிய தீ நகரத்திலிருந்து பல நூறு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

எந்தவொரு புகை அபாயங்களும், ஆபத்தானது என்று உறுதியான தகவலாக தெரிவித்தால் நடுவர்கள் ஆட்டத்தை நிறுத்த முடியும். ஆனால் மெல்போர்ன் பூங்காவில் மூன்று கூரை அரங்கங்களும் மற்ற எட்டு உட்புற அரங்குகளும் இருப்பதால் பாதுகாப்பு வசதிகள் உள்ளன’’ என்றார்.

.

மூலக்கதை