5 நாளில் இருந்து 4 நாளாக குறைக்கும் திட்டம் ‘டெஸ்ட்’ போட்டியின் ஆன்மாவை சிதைக்காதீங்க..!: மூத்த வீரர்களின் யோசனையை புறக்கணிக்கும் ஐசிசி

தமிழ் முரசு  தமிழ் முரசு
5 நாளில் இருந்து 4 நாளாக குறைக்கும் திட்டம் ‘டெஸ்ட்’ போட்டியின் ஆன்மாவை சிதைக்காதீங்க..!: மூத்த வீரர்களின் யோசனையை புறக்கணிக்கும் ஐசிசி

துபாய்: கிட்டதட்ட 143 ஆண்டுகால டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 5 நாட்களில் இருந்து 4 நாட்களாக குறைக்கலாம் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) சமீபத்தில் யோசனை தெரிவித்து இருந்தது. இதனை 2023ம் ஆண்டு முதல் 4 நாட்கள் டெஸ்ட் போட்டியை அமல்படுத்த ஐசிசி-யை பரிசீலனை செய்து வருகிறது.

துபாயில் மார்ச் மாதம் நடைபெறும் ஐசிசி கிரிக்கெட் கமிட்டி கூட்டத்தில் 4 நாட்கள் டெஸ்ட் போட்டி குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும், தற்போதைய 90 ஓவருக்கு பதிலாக ஒரு நாளைக்கு 98 ஓவர்கள் வைத்திருக்க ஐசிசி-யை திட்டமிட்டுள்ளது.

ஆனால், டெஸ்ட் கிரிக்கெட் போட்டியை 4 நாட்களாக குறைப்பதற்கு இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஜாம்பவான் சச்சின், ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங், பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர், சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன் உள்பட பலரும் ஆட்சேபனை தெரிவித்து இருந்தனர்.

இதுகுறித்து, கிரிக்கெட் விமர்சகர்கள் கூறியதாவது: தற்போதுள்ள ​​ஐந்து நாள் போட்டி, வீரர்களின் உடல் மற்றும் மனப் பண்புக்கூறுகள் மற்றும் அவரது திறமை ஆகியவற்றின் தொகுப்பை மையமாக கொண்டுள்ளது.

அவர்கள் ஐந்தாவது நாளில் போட்டியை எதிர்கொள்ளும்போது, ​​ஆடுகளத்தின் இயல்பான நிலையை தவிர்த்து, மனம் மற்றும் உடலைப் பற்றிய மிகக் கடுமையான பரிசோதனையை அணிகள் எதிர்கொள்கின்றன. வணிக நலன்களுக்கு ஏற்ப, 5 நாள் என்பதை 4 நாட்களாக எடுத்துச் செல்ல விரும்புகிறீர்களா? அதிக லாபகரமான ஒருநாள் மற்றும் டி20 போட்டியை போன்று டெஸ்டையும் பார்க்கிறீர்களா? விளையாட்டு என்பது முழுக்க பணத்தைப் பற்றியது அல்ல. டெஸ்ட் போட்டியின் ஆன்மாவை சிதைக்க வேண்டாம்.

சில டெஸ்ட்கள் நான்கு நாட்களுக்குள் முடிவடைகின்றன. இருப்பினும், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாள் முடிவுகள் திருப்புமுனையை ஏற்படுத்தி விடுகிறது.

2001ல் ஈடன் கார்டனில் நடந்த டைட்டானிக் இந்தியா-ஆஸ்திரேலியா மோதலை விட பெரிய உதாரணம் எதுவும் இருக்க முடியாது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

.

மூலக்கதை