தளபதி மரணத்துக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி?

தமிழ் முரசு  தமிழ் முரசு
தளபதி மரணத்துக்கு பதிலடியாக ஈரான் ஏவுகணை தாக்குதல் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலி?

* இந்தியா உட்பட உலக நாடுகளின் விமானங்கள் ஈரான், ஈராக் வான்வெளியில் பறக்க தடை
* டிரம்ப் அவசர ஆலோசனை; போர் மூளும் அபாயம்

வாஷிங்டன்: ஈராக்கில் உள்ள அமெரிக்க விமான தளங்கள் மீது இன்று ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியதில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. அதனால் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார். இதற்கிடையே உக்ரைன் விமானம் விபத்தில் சிக்கியதால் பதற்றமான சூழல் நிலவி உள்ளது.

ஈரான், ஈராக் வான்வெளியை பயன்படுத்த வேண்டாமென அமெரிக்க, இந்திய, சிங்கப்பூர் உள்ளிட்ட உலக நாடுகள் விமான நிறுவனங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரானின் பாக்தாத் நகரின் மீது அமெரிக்கப் படைகள் நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவ உளவு படைப்பிரிவின் தலைவர் ஜெனரல் குவாசிம் சுலைமானி, ஈரான் ஆதரவுடன் ஈராக்கில் செயல்படும் படைப் பிரிவின் துணைத் தலைவர் அ‌பு மஹ்தி அல் முகாந்திஸ் மற்றும் முக்கிய அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.



இதனால், அமெரிக்கா - ஈரான் இடையே பதட்டமான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், ஈராக்கிலுள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்கள் மீது ஈரானிலிருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இரவு நேரத்தில் ஒரு டஜன் ஏவுகணைகள் மூலம் இரு முகாம்களின் மீது அடுத்தடுத்து தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அயின் அல் அஷாத் தளத்தில் உள்ள விமானப்படை முகாம்களில் தாக்குதல் நடந்ததாகவும் கூறப்படுகிறது. ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியை அமெரிக்கா கடந்த வாரம் கொன்ற நிலையில், அதற்கு பதிலடி தரும் வகைல் இத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் எனத் தெரிகிறது.

இத்தாக்குதலில் எந்தளவுக்கு பாதிப்புகள் ஏற்பட்டது என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாக அமெரிக்க அமைச்சர் ஹாஃப்மேன் தெரிவித்துள்ளார்.

இத்தாக்குதல் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்பிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், ஈராக்கில் நிலைமையை கூர்ந்து கவனித்து வருவதாகவும் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஸ்டெஃபானி கிரிஷம் தெரிவித்தார். சுலைமானி கொலைக்கு பதிலடி தரும் விதமாக அமெரிக்க முகாம்கள் மீது ஈரான் படைகள் ஏற்கனவே ஒரு முறை தாக்குதல் நடத்தியிருந்த நிலையில் தற்போது இரண்டாவது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

ஈராக் நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள பரந்த ஐன் அல்-ஆசாத் விமானத் தளத்தை 9 ராக்கெட்டுகள் தாக்கியதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன. இது வெளிநாட்டு துருப்புக்களை அடிப்படையாகக் கொண்ட ஈராக் ராணுவ பலத்தில் மிகப்பெரியது.

இந்த தாக்குதல் நள்ளிரவுக்குப் பிறகு மூன்று முறை நடந்ததாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலுக்கான பொறுப்பை ஈரான் ஏற்றுக்கொண்டது, அரசின் அரசு தொலைக்காட்சி, பல ஏவுகணைகளை ஏவியதாகவும், அமெரிக்கா மேலும் தாக்குதல் நடத்தினால் மேலும் மோசமான பதிலடியை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிவித்துள்ளது.



இந்த தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 80 பேர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கிடையே, அமெரிக்க படைகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது குறித்து, ‘ஆல் இஸ் வெல்’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ட்வீட் செய்துள்ளார்.

அதில், ‘2 அமெரிக்க விமானப்படை தளங்கள் மீது ஈரானில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதலின் சேதம் குறித்து ஆராயும் பணி நடக்கிறது.

இதுவரை எல்லாம் நன்றாகவே நடந்திருக்கிறது. மிகவும் சக்திவாய்ந்த, நவீன ஆயுதங்கள் எங்களிடம்தான் இருக்கின்றன.

நாளை காலை அறிக்கை வெளியிடுகிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.

மத்திய கிழக்கு நாடுகளில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் ஏவுகணை தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (எஃப்ஏஏ) தனது விமான போக்குவரத்தை ஈரான், ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா, ஓமான் வளைகுடா ஆகியவற்றின் வான்வெளியில் பறக்க தடைவிதித்துள்ளது.

அதேபோல், இந்தியாவும் தனது விமான நிறுவனங்களுக்கு ஈராக்கில் அமெரிக்க துருப்புகள் மீது ஈரான் தாக்குதலை ெதாடர்ந்து மேற்கண்ட நாடுகளின் வான்வெளியை பயன்படுத்துவதை தவிர்க்க அறிவுறுத்தி உள்ளது. ஏற்கனவே, ஈரான், ஈராக் மற்றும் பாரசீக வளைகுடா, ஓமான் வளைகுடா நாடுகளின் வான்வெளியை விமானப்படைகளுக்கு (நோட்டாம்) எப்ஏஏ அறிவிப்பு வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து, சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் செய்தித் தொடர்பாளர் கூறுைகயில், “பிராந்தியத்தின் சமீபத்திய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, ஐரோப்பாவிற்கு வெளியேயும், அனைத்து எஸ்ஐஏ விமானங்களும் ஈரானிய வான்வெளியில் பறக்காது. நாங்கள் தொடர்ந்து நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிப்போம்’’ என்றார்.



பல நாடுகள் மத்திய கிழக்கு நாடுகளின் வான்வெளியை பயன்படுத்த தடைவிதித்துள்ள நிலையில், பயணிகள் ஜெட் விமானங்கள் இலக்கு வைக்கப்படுவதைத் தவிர்ப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிவில் விமான அதிகாரிகள் இந்த ஆலோசனைகள் அல்லது தடைகளை வெளியிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் ஒருபகுதியாக இன்று, உக்ரைன் விமானம் ஈரானில் நடந்த விபத்தில் நொறுங்கி விழுந்ததால், 180 பயணிகள் பலியானதாக தகவல் வந்துள்ளதால், பல நாட்டு விமான நிறுவனங்களும் எச்சரிக்கை விடுத்துள்ளன.

அதனால், மத்திய கிழக்கு நாடுகளில் போர் மூளும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

எச்சரிக்கையாக இருங்கள்!
இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரவீஷ் குமார் வெளியிட்ட ட்வீட்டில், ‘ஈராக்கில் பதற்றமான சூழல் நிலவி வருவதால் இந்திய மக்கள், அவசியம் இல்லாத பட்சத்தில் ஈராக்கிற்குச் செல்வதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

ஈராக்கில் இருக்கும் இந்தியர்களும் உஷார் நிலையில் இருக்கவும். ஈராக்கிற்குள்ளேயே பயணம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.

ஈராக்கில் இருக்கும் இந்தியர்களின் நலனுக்காக பாக்தாத் மற்றும் எர்பில் பகுதிகளில் இருக்கும் நமது தூதரகங்கள் தொடர்ந்து செயல்படும்’ என்று தெரிவித்துள்ளார்.


.

மூலக்கதை