‘வாக்குவம்’ கிளீனர், அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் பயன்படுத்தி என்ன செஞ்சாலும் ஈரம் குறையல சார்...!: சொதப்பிய பிசிசிஐக்கு கண்டனம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘வாக்குவம்’ கிளீனர், அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் பயன்படுத்தி என்ன செஞ்சாலும் ஈரம் குறையல சார்...!: சொதப்பிய பிசிசிஐக்கு கண்டனம்

கவுகாத்தி: இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டு இருந்தது. டி20 தொடரின் முதல் போட்டி அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நடைபெற இருந்தது.

போட்டியில் டாஸ் வென்ற கேப்டன் விராட் கோஹ்லி, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்த ஆடுகளம் சேஸிங் செய்ய எளிதாக இருக்கும் என்பதை நினைத்து அந்த முடிவை எடுத்தார்.

இந்திய அணியில் பும்ரா நீண்ட இடைவெளிக்குப் பின் இடம் பெற்றார். புவனேஸ்வர் குமார், தீபக் சாஹர் இல்லாத நிலையில், பும்ராவுடன் இணைந்து ஷர்துல் தாக்குர், நவ்தீப் சைனி வேகப் பந்துவீச்சாளர்களாக இடம் பெற்றனர்.

டாஸ் போட்ட அடுத்த சில நிமிடங்களில் மைதானத்தில் மழை பெய்யத் துவங்கியது. அதனால், போட்டி துவங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், அவுட் பீல்டுகளில் இருக்கும் தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்றது.

இருந்தும் தொடர்ந்து மழை பெய்ததால் போட்டி தாமதமானது. சில நிமிடங்கள் கழித்து, ஆடுகளத்தில் உள்ள மழைநீரை காய வைக்கும் முயற்சிகள் நடைபெற்றன.

ஒரு கட்டத்தில் தெருவை சுத்தம் செய்யும் ‘வாக்குவம்’ கிளீனர் வைத்தும் காய வைக்க முடியாமல், அயர்ன் பாக்ஸ், ஹேர் டிரையர் உள்ளிட்டவை மூலம் ஆடுகளத்தை காய வைக்க முயற்சி நடந்தது.

எப்படியும் போட்டியை நடத்திவிடலாம் என்று பிசிசிஐ நிர்வாகம் முயற்சி செய்தும் இயற்கை அதற்கு கைகொடுக்கவில்லை. ஒருகட்டத்தில் மைதான பராமரிப்பாளர்களே கடுப்பாகிவிட்டனர்.

அதனால், பிசிசிஐ மற்றும் கவுகாத்தி மைதான நிர்வாகிகளை ரசிகர்கள் சகட்டு மேனிக்கு திட்டி வருகின்றனர். இவர்களின் சொதப்பலால், ஆடுகளத்தை குறித்த நேரத்திற்குள் தயார்செய்ய முடியவில்லை.

இதையடுத்து, போட்டி கைவிடப்பட்டது. மூன்று போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி கைவிடப்பட்டுள்ளது.

எனவே, அடுத்து வரும் இரு போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணியால் இந்த தொடரை கைப்பற்ற முடியும்.

.

மூலக்கதை