பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதி உட்பட 8 பேர் பலி

தமிழ் முரசு  தமிழ் முரசு
பாக்தாத் விமான நிலையம் மீது அமெரிக்கா தாக்குதல்: ஈரான் ராணுவ தளபதி உட்பட 8 பேர் பலி

பாக்தாத்: பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் ஈரான் குட்ஸ் படை தலைவர், போராளிகளின் துணை தளபதி உட்பட 8 பேரை அமெரிக்க படைகள் கொன்றதால், மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் நிலவி வருகிறது.

ஈராக் தலைநகர் பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது, அமெரிக்க படைகள் 3 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தியது. அதில், 8 பேர்  கொல்லப்பட்டனர்.

விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. ராக்கெட்டுகள் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் விழுந்து வெடித்தன.

கடந்த வாரம்,  ஹிஸ்புல்லா அமைப்பின் தளம் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலை கண்டித்து, அந்நாட்டு தூதரகம் முற்றுகையிடப்பட்டது. இந்த போராட்டத்தின் போது   அமெரிக்க தூதரகத்தை போராட்டக்காரர்கள் சூறையாடினர்.

தூதரகம் சூறையாடப்பட்டதற்கு ஈரான் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் கண்டனம்  தெரிவித்து இருந்தார்.   இத்தகைய சூழலில், ஈரான் விமான நிலையம் மீது தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தலைவரான ஜெனரல் காசிம் சோலைய்மானி,  பாக்தாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த விமானத்  தாக்குதலில் கொல்லப்பட்டதாக ஈராக் தொலைக்காட்சி மற்றும் மூன்று ஈராக்  அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், ஈரான் ஆதரவுடைய போராளிகளின் துணைத்  தளபதி அபு மஹ்தி அல் முஹந்திசும் கொல்லப்பட்டார். அவர்களின் மரணங்கள்  மத்திய கிழக்கு நாடுகளில் முக்கிய திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதல் சம்பவத்தால், இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக கடுமையாக ஈரான் பதிலடி கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தாக்குதல் நடந்த சில மணி நேரத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், புளோரிடாவின் பாம் பீச்சில் உள்ள தனது தோட்டத்தில் விடுமுறைக்கு சென்றிருந்தார்.

அவர் தனது ட்விட் பக்கத்தில், அமெரிக்க கொடியின் படத்தை பதிவிட்டுள்ளார்.

பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடந்த தாக்குதலுக்கு அமெரிக்காவை பி. எம். எஃப் குற்றம் சாட்டியது. அமெரிக்காவின் பென்டகன் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது.

பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், “ஜனாதிபதி ட்ரம்பின் வழிகாட்டுதலின் பேரில் ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தலைவரான சோலைய்மானியை அமெரிக்க ராணுவம் கொன்றது. இந்த தாக்குதல், எதிர்கால ஈரானிய தாக்குதல் திட்டங்களைத் தடுக்கும் நோக்கில் இருந்தது” என்று தெரிவித்துள்ளது.

ஈரானுக்கு விசுவாசமான இரண்டு தலைவர்கள் மற்றும் இந்த வாரம் அமெரிக்க தூதரகம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கட்டேப் ஹெஸ்பொல்லாவுடன் ஒரு அதிகாரியும் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் மூலம் லெபனான் அல்லது சிரியாவிலிருந்து வந்திருந்த சோலைய்மானியை வரவேற்க அல்-முஹந்திஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் பாக்தாத் விமான நிலையம் சென்றனர். அப்போது அமெரிக்க படைகள் தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது.

இந்த தாக்குதலில், சோலைய்மானியின் உடல் அவர் அணிந்திருந்த மோதிரத்தால் அடையாளம் காணப்பட்டது.

ஏற்கனவே, 2006ம் ஆண்டு விமான விபத்தில் வடமேற்கு ஈரானில் ஈரானின் உயரடுக்கு குட்ஸ் படையின் தலைவரான ஜெனரல் காசிம் சோலைய்மானி இறந்ததாகவும், 2012 டமாஸ்கஸில் குண்டுவெடிப்பைத் தொடர்ந்து சோலைய்மானி இறந்ததாகவும்,. சிரியாவின் அலெப்போவைச் சுற்றி சண்டையிட்டபோது, ​​அசாத்துக்கு விசுவாசமாக இருந்த முன்னணி சக்திகள் சோலைய்மானியை கொன்றதாகவும் வதந்திகள் பரவின.

ஆனால், தற்போது அமெரிக்க படை தாக்குதல் சம்பவத்தில், அவர் பலியாகி உள்ளார்.

.

மூலக்கதை