2020 மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்: மரியா ஷரபோவா உற்சாகம்

தமிழ் முரசு  தமிழ் முரசு
2020 மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்: மரியா ஷரபோவா உற்சாகம்

பிரிஸ்பேன்: ரஷ்ய வீராங்கனை மரியா ஷரபோவாவுக்கு, பிரிஸ்பேன் ஓபன் போட்டிகளில் ஆட வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. ‘மீண்டும் எனது  ரசிகர்களை சந்திக்கப் போகிறேன்.

2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’  என ஷரபோவா உற்சாகமாக  பேட்டியளித்துள்ளார்.
திறமையான வீராங்கனை, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் முன்னணி வீராங்கனைகளுக்கு அச்சுறுத்தல் என வலம் வந்த மரியா ஷரபோவா, ஒரு கட்டத்தில்  டென்னிசை விட மாடலிங்கிற்கே அதிக முக்கியத்துவம் கொடுத்தார். ரசிகர்களின் கவர்ச்சி கன்னியாக இடம் பிடித்த ஷரபோவா, இன்னமும் எனக்கு திறமை  இருக்கிறது என்பதை நிரூபிக்கும் வகையில் இடை இடையே டென்னிஸ் போட்டிகளில் முத்திரை பதித்து வந்தார்.

கடந்த ஆண்டு கிராண்ட்ஸ்லாம் போட்டிகள் உட்பட முன்னணி சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் பெரும்பாலும் ஷரபோவா ஆடவில்லை.

ஒன்றிரண்டு  போட்டிகளில் மட்டுமே தலை காட்டினார். அதிலும் பெரிய அளவில் வெற்றிகள் பெறவில்லை. இந்நிலையில் ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் அடுத்த வாரம் துவங்க உள்ள இந்த ஆண்டின் முதல் சர்வதேச டென்னிஸ் போட்டியான பிரிஸ்பேன்  ஓபனில், ஆடுவதற்கு அவருக்கு வைல்ட் கார்ட் என்ட்ரி வழங்கப்பட்டுள்ளது. பொதுவாக வைல்ட் கார்ட் என்ட்ரி (நேரடி அனுமதி) என்பது, தரவரிசையில் இடம் பெறாத, அதே சமயம் திறமையாக ஆடிவரும் வீரர்கள், வீராங்கனைகள்  சர்வதேச போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பளிக்கும் வகையில் வழங்கப்படுகிறது.

ஆனால் இதே பிரிஸ்பேனில் கடந்த 2015ம் ஆண்டு, மகளிர் ஒற்றையர் பட்டத்தை  வென்ற ஷரபோவாவுக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது டென்னிஸ் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2017ம் ஆண்டு யு. எஸ். கிராண்ட்ஸ்லாம் போட்டியில் இதே போல் வைல்ட் கார்ட் என்ட்ரியில் நுழைந்தார் ஷரபோவா என்பது குறிப்பிடத்தக்கது. தனது இந்த என்ட்ரி குறித்து உற்சாகமாக பேட்டியளித்துள்ள ஷரபோவா, ‘மீண்டும் வருகிறேன்.

எனது ரசிகர்களை மீண்டும் சந்திக்கிறேன் என்பதில் எனக்கு  மகிழ்ச்சி. இந்த 2020ம் ஆண்டு எனக்கும், எனது ரசிகர்களுக்கும் மகிழ்ச்சிகரமான ஆண்டாக இருக்கும்’ என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார். தோள்பட்டை காயம் காரணமாக கடந்த ஆண்டு, பெரும்பாலான போட்டியில் ஷரபோவா ஆடவில்லை.

இப்போது பிரிஸ்பேன் என்ட்ரி மூலம் வெளிச்சத்துக்கு  வந்துள்ளார்.

தொடர்ந்து இந்த ஆண்டு சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் ஆடுவேன் என்று முன்னணி வீராங்கனைகளுக்கு ஷரபோவா மறைமுகமாக எச்சரிக்கை  விடுத்திருக்கிறார் என அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

.

மூலக்கதை