‘2020ம் ஆண்டில் ஓய்வு’..லியாண்டர் பயஸ் அறிவிப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
‘2020ம் ஆண்டில் ஓய்வு’..லியாண்டர் பயஸ் அறிவிப்பு

சென்னை: ‘‘வரும் 2020ம் ஆண்டில் டென்னிஸ் போட்டிகளில் இருந்து எனது ஓய்வை அறிவிக்க உள்ளேன். எனவே 2020 நான் அனைவருக்கும் நன்றி சொல்லும் ஆண்டாக அமையும்’’ என்று இந்திய டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் ‘ட்வீட்’ செய்துள்ளார்.

இந்திய டென்னிஸ் நட்சத்திரம் லியாண்டர் பயஸ், கடந்த 1991ம் ஆண்டு தனது முதலாவது சர்வதேச டென்னிஸ் போட்டியை துவக்கினார். தற்போது 46வது வயதில் உள்ள இவர், 18 இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார்.   தவிர கடந்த 1996ம் ஆண்டு அட்லாண்டாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் ஒற்றையர் ஆட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
30 ஆண்டுகளாக இரட்டையர் போட்டிகளில் ஜொலித்து வருகிறார் பயஸ்.

100க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகளுடன் இணைந்து இரட்டையர் போட்டிகளில் ஆடியுள்ள பயஸ், 54 பட்டங்களை வென்றுள்ளார். மேலும் டேவிஸ் கோப்பை போட்டிகளிலும் இரட்டையர் பிரிவில் 56 போட்டிகளில் ஆடி, அவற்றில் 43 போட்டிகளில் வெற்றி பெற்று, தனி முத்திரை பதித்துள்ளார்.



‘‘வரும் 2020ம் ஆண்டில் சர்வதேச மற்றும் அனைத்து விதமான டென்னிஸ் போட்டிகளில் இருந்து என்னுடைய ஓய்வை அறிவிக்க உள்ளேன். 2020ம் ஆண்டில் குறிப்பிட்ட சில டோர்னமென்ட்களை தேர்ந்தெடுத்து ஆட உள்ளேன்.

அவற்றில் ஆடுவதன் மூலம் சக வீரர்கள் மற்றும் நண்பர்களுடன் பிடித்த நாடுகளுக்கு பயணம் செய்து, இந்த ஆண்டை கொண்டாட உள்ளேன். அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டிய வேளை வந்து விட்டது.

என்னுடைய இந்த சாதனைகளுக்கு எல்லாம் குடும்பத்தினரும், ரசிகர்களுமே காரணம் என்பதை நான் ஒவ்வொரு நொடியும் உணர்ந்திருக்கிறேன்’’ என்று பயஸ் தற்போது ‘ட்வீட்’ செய்துள்ளார்.

மகேஷ் பூபதியும், லியாண்டர் பயசும் இணைந்து ஆடவர் இரட்டையர் போட்டிகளில் பெரும் சாதனைகளை படைத்துள்ளனர். கடந்த 1999ம் ஆண்டு 4 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் ஆடவர் இரட்டையர் பிரிவில் இறுதிப்போட்டிகளில் ஆடி, சர்வதேச டென்னிஸ் அரங்கை அதிர வைத்தனர்.

அந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் பட்டங்களை வென்று, ரசிகர்களின் இதயத்தில் இந்த ஜோடி இடம் பிடித்தது.

இந்த ஜோடி 1997ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை 26 இரட்டையர் பட்டங்களை வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை