அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
அதிபர் டிரம்ப் மீது கண்டன தீர்மானம் அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் நிறைவேறியது

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப் மீது, அந்நாட்டு பிரதிநிதிகள் சபையில் கொண்டு வரப்பட்ட கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் அடுத்த ஆண்டு இறுதியில் நடக்க உள்ளது. அதில் குடியரசு கட்சி சார்பில் டொனால்டு டிரம்ப், மீண்டும் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன்  போட்டியிடுவார் என கருதப்படுகிறது. இந்நிலையில் ஜோ பிடனின் மகனுக்கு உக்ரைன் எரிவாயு நிறுவனத்தில் உள்ள வர்த்தக தொடர்பு குறித்து விசாரணை நடத்துமாறு உக்ரைன் அரசிடம் டிரம்ப் கேட்டுக்கொண்டதாக புகார் எழுந்தது. அத்துடன் தன் மீதான புகாரை பார்லி. யில்  விசாரிக்க தடை ஏற்படுத்த டிரம்ப் முயற்சித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது.

மேலும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும் புகார் எழுந்தது. இதையடுத்து அதிபர் டிரம்ப் மீது எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி கண்டன தீர்மானம் கொண்டு  வந்தது.

இந்த தீர்மானத்தின் மீது பார்லி. யில் 14 மணி நேரம் விவாதம் நடந்தது. இந்நிலையில் இந்த புகார்களின் அடிப்படையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானத்தின் மீது பார்லி. யில் ஓட்டெடுப்பு நடத்த நீதித்துறைக்கான பார்லி. குழு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து டிரம்ப்பை பதவி நீக்குவதற்கான கண்டன  தீர்மானம் முதல்கட்டமாக பிரதிநிதிகள் சபையில் தாக்கல் செய்யப்பட்டு விவாதம் நடந்தது.

இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை பிரதிநிதிகள் சபையில் நடந்த ஓட்டெடுப்பில், 229 உறுப்பினர்கள் தீர்மானத்திற்கு ஆதரவாக ஓட்டளித்தனர். 194 உறுப்பினர்கள் மட்டும் தீர்மானத்தை எதிர்த்து ஓட்டளித்தனர்.

இதனையடுத்து  பிரதிநிதிகள் சபையில் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் நிறைவேறியது. இங்கு கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும், 100 உறுப்பினர்களை கொண்ட செனட் சபையில் கண்டன தீர்மானம் நிறைவேறினால் மட்டுமே, டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய முடியும். செனட் சபையில் டிரம்ப்பின் குடியரசு கட்சிக்கு 53  உறுப்பினர்கள் உள்ளனர்.

எதிர்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். குடியரசு கட்சிக்கு பெரும்பான்மை பலம் உள்ளதால் கண்டன தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு டிரம்ப் பதவி காப்பாற்றப்படும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கண்டன தீர்மானம் மீது அமெரிக்க செனட் சபையில் அடுத்த மாதம் ஓட்டெடுப்பு நடத்தப்பட உள்ளது. அமெரிக்காவில் இரு அதிபர்கள் மீது இதுவரை கண்டன தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 1868ல் அதிபர் ஆண்ட்ரூ ஜான்சன் மற்றும் 1998ல் அதிபர் பில் கிளின்டன் ஆகியோர் மீது பிரதிநிதிகள் சபையில் கண்டன தீர்மானம்  நிறைவேற்றப்பட்டது.

செனட் சபையில் நடந்த ஓட்டெடுப்பில் இவர்களுக்கு எதிரான கண்டன தீர்மானம் தோல்வி அடைந்ததை அடுத்து அவர்கள் பதவி தப்பியது என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை