குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கேரளாவில் முதல்வர் திடீர் போராட்டம்: நாளை முழு அடைப்புக்கு அழைப்பு

தமிழ் முரசு  தமிழ் முரசு
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு கேரளாவில் முதல்வர் திடீர் போராட்டம்: நாளை முழு அடைப்புக்கு அழைப்பு

திருவனந்தபுரம்: குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் இன்று காலை முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் திடீர் தர்ணா போராட்டம் நடந்தது. இதில் காங்கிரஸ் கட்சியினரும் கலந்துகொண்டனர்.

இதற்கிடையே நாளை கேரளாவில் முழு அடைப்புக்கு வெல்பேர் கட்சி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. மத்திய அரசு கொண்டுவந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது.

டெல்லியில் நேற்று இந்த போராட்டம் நடந்தது. பேரணியாக சென்ற ஜாமியா மிலியா பல்கலைக்கழகம், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்களை போலீசார் சரமாரியாக தாக்கினர்.

பல்கலைக்கழக வளாகத்துக்குள் போலீசார் புகுந்து இந்த தாக்குதலை நடத்தினர். இந்த தாக்குலில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் காயம் அடைந்தனர்.

அரசு பஸ்களும் தீவைத்து ெகாளுத்தப்பட்டன. டெல்லியை போல் கேரளாவிலும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இதன் எதிரொலியாக நேற்று கேரளாவில் போராட்டங்கள் வெடித்தன.

டெல்லியில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தியதை கண்டித்து நேற்று நள்ளிரவில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் (டிஒய்எப்ஐ) திருவனந்தபுரத்தில் கவர்னர் மாளிகை நோக்கி கண்டன பேரணி நடத்தியது.

இதையொட்டி கவர்னர் மாளிகை முன்பு போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்திருந்தனர். ஆனால் போராட்டக்காரர்கள் அதையும் தாண்டி கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர்.

இதையடுத்து உஷாரான போலீசார் தண்ணீரை பீய்ச்சி அடித்து அவர்களை விரட்டி அடித்தனர். இதையடுத்து அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

அதைத் தொடர்ந்து அந்த இடத்தில் இருந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதையடுத்து காங்கிரஸ் மாணவர் அமைப்பான கேஎஸ்யூவை சேர்ந்தவர்களும் கவர்னர் மாளிகை முன் போராட்டம் நடத்தினர்.

அவர்களும் தடுப்பு வேலிகளை தாண்டி கவர்னர் மாளிகைக்குள் நுழைய முயன்றனர். அவர்களையும் ேபாலீசார் தண்ணீரை பீய்ச்சியடித்து விரட்டி அடித்தனர். நள்ளிரவில் அடுத்தடுத்து நடந்த இந்த போராட்டங்களால் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் நேற்று மலப்புரம், கோழிக்கோடு கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் முஸ்லீம் லீக், காங்கிரஸ் கட்சிகள் சார்பில் கண்டன பேரணிகளும் நடத்தப்பட்டன. இந்த நிலையில் இன்று காலை குடியுரிமை சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கூட்டணி  கட்சியினர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் முதல்வர் பினராயி விஜயன், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, எம்எல்ஏக்கள், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லீம் லீக் உள்பட இரு கட்சிகளின் கூட்டணி நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.நாளை முழு அடைப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து கேரளாவில் நாளை (17ம் தேதி) முழு அடைப்பு போராட்டத்துக்கு வெல்பேர் கட்சி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன. இதுதொடர்பாக வெல்பேர் கட்சி மாநில தலைவர் ஹமீது வாணியம்பலம் கூறியதாவது: குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை கேரளாவில் 12 மணிநேர முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும்.

இதில் எஸ்டிபிஐ, பிஎஸ்பி உள்பட 30க்கும் மேற்பட்ட அமைப்புகள் கலந்து கொள்கின்றன. நாளை காலை 6 முதல் மாலை 6 மணி வரை இந்த முழு அடைப்பு ேபாராட்டம் நடத்தப்படுகிறது.

இந்த போராட்டத்தில் இருந்து சபரிமலை ஐயப்ப பக்தர்களுக்கு விலக்கு அளிக்கப்படும். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு எந்த சிரமமும் ஏற்படாது என்றார்.

இந்த முழு அடைப்பு போராட்டத்துக்கு ஆதரவளிக்க மாட்டோம் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ், முஸ்லீம் லீக் கட்சிகள் அறிவித்து உள்ளன.

கவர்னருக்கு கருப்புக்கொடி

மணிப்பூர் மாநில கவர்னர் நஜ்மா ஹெப்துல்லா லட்சத்தீவு செல்வதற்காக இன்று காலை விமானம் மூலம் கொச்சி வந்தார். தொடர்ந்து ஆலுவா விருந்தினர் மாளிகைக்கு காரில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது வழியில் திரண்டிருந்த ஏராளமான இளைஞர் காங்கிரசார் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து போலீசார் விரைந்து சென்று போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றினர்

.

மூலக்கதை