ஹோப் - ஹெட்மயர் ஜோடியை பிரிக்க முடியாமல் தவிப்பு தோல்விக்கு காரணம் 2 பகுதி நேர பவுலர்கள்: அணி தேர்வில் கேப்டன் கோஹ்லி சொதப்பல்

தமிழ் முரசு  தமிழ் முரசு
ஹோப்  ஹெட்மயர் ஜோடியை பிரிக்க முடியாமல் தவிப்பு தோல்விக்கு காரணம் 2 பகுதி நேர பவுலர்கள்: அணி தேர்வில் கேப்டன் கோஹ்லி சொதப்பல்

சென்னை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டி சென்னையில் நடைபெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.

டாஸில் தோல்வி அடைந்த இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்கம் முதலே வெஸ்ட் இண்டீஸ் அணியின் வேகப் பந்துவீச்சை இந்திய வீரர்கள் சமாளிக்க திணறினர்.

ஷெல்டன் காட்ரல் வீசிய முதல் 5 ஓவர்களில் 3 ஓவர்கள் மெய்டனாக வீசினார். அவரது பந்துவீச்சில் 7 வது ஓவரில் ராகுல் 6, கோஹ்லி 4 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அடுத்து ரோஹித் சர்மா 36 ரன்களில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இந்தியா 80 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்த நிலையில்,  அடுத்து ஆடிய ஸ்ரேயாஸ் ஐயர் 70, ரிஷப் பண்ட் 71 ரன்கள் குவித்தனர்.

மற்ற இந்திய பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்கள் இழப்பிற்கு 287 ரன்களை இந்தியா குவித்தது.

காட்ரல் 2, கீமோ பால் 2, ஜோசப் 2, பொல்லார்டு 1 விக்கெட் வீழ்த்தினர். சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான, மந்தமான சென்னை ஆடுகளத்தில், 288 ரன்கள் என்பது வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சவாலாக இருந்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் சுனில் ஆம்ப்ரிஸ் 9 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் ஜோடி சேர்ந்த ஹோப் - ஹெட்மயர் 35 ஓவர்களையும் தாண்டி சீராக ரன் குவித்து வந்தது.

இவர்களை பிரித்தால் தான் இந்தியாவுக்கு வெற்றி பெற வாய்ப்பு என்ற நிலையில் இந்தியா தவித்தது. அந்த மோசமான நிலைக்கு காரணம், இந்திய அணியின் அணித் தேர்வுதான்.

கேப்டன் கோஹ்லி இந்தப் போட்டிக்கு ஷமி, தீபக் சாஹர், குல்தீப் யாதவ், ஜடேஜா என நான்கு முழு நேர பந்துவீச்சாளர்களையும், கேதார் ஜாதவ், சிவம் துபே என இரண்டு பகுதி நேர பந்துவீச்சாளர்களையும் தேர்வு செய்தார்.

ஆனால், 2 பகுதி நேர பந்துவீச்சாளர்களையும்தான், மேற்கண்ட ஹோப் - ஹெட்மயர் கூட்டணி விளாசித் தள்ளியது. ஹெட்மயர் 106 பந்துகளில் 139 ரன்கள் குவித்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அடுத்து ஹோப் - நிக்கோலஸ் பூரன் ஜோடி மீண்டும் நிதான ஆட்டம் ஆடி விக்கெட் விழாமல், ஒரு பந்துக்கு ஒரு ரன் தேவை என்ற நிலையில் போட்டியை 48வது ஓவர் வரை எடுத்துச் சென்று சேஸிங்கை வெற்றிகரமாக முடித்து வைத்தனர். ஹோப் 102 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்.

இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து ஒருநாள் தொடரில் 1 - 0 என பின்தங்கி உள்ளது. 2வது ஒரு நாள் போட்டி வருகிற 18ம் தேதி ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது.

3வது மற்றும் இறுதிேபாட்டி வருகிற 22ம் தேதி ஒடிசாவின் கட்டாக்கில் நடக்கிறது.

இந்திய மண்ணில் ஹெட்மயர்

சென்னை போட்டியில் 139 ரன்கள் விளாசிய ஹெட்மயர், இந்திய மண்ணில் இந்திய அணிக்கு எதிராக சேஸிங் செய்த போது அதிக ரன்கள் விளாசிய வீரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடம் பிடித்தார்.

இப்பட்டியலில் இலங்கையின் தில்ஷன் (160, ராஜ்கோட், 2009), இங்கிலாந்தின் ஆண்டிரு ஸ்டிராஸ் (158, பெங்களூரு, 2011), இலங்கையின் சனத் ஜெயசூர்யா (151*, மும்பை, 1997), சந்தர்பால் (149, நாக்பூர், 2007) ஆகியோர் முதல் நான்கு இடத்தில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

.

மூலக்கதை