உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக!

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தல் விவகாரம்: தமிழக தேர்தல் ஆணையர் மீது உச்சநீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது திமுக!

புதுடெல்லி: உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. ஊரக உள்ளாட்சிகளில் இடஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையறையை தெளிவுபடுத்திய பின்னர் தேர்தலை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அதுவரை தற்போது புதிதாக வெளியிடப்பட்டுள்ள தேர்தல் அட்டவணையை ரத்து செய்ய வேண்டும் என்றும் திமுக கூட்டணி கட்சிகள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பை,  தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே, நீதிபதிகள் அப்துல் நசீர் மற்றும் சஞ்ஜீவ் கண்ணா ஆகியோர் வழங்கினர். அதில் தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் நடத்த வேண்டும்.இதில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள ஒன்பது புதிய மாவட்டங்களுக்கு அடுத்த 3 மாதத்தில் வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு பணிகளை விரைந்து முடித்து தேர்தலை நடத்த வேண்டும். இதுகுறித்த அனைத்து பணிகளையும் மறுவரையறை ஆணையம் கண்காணிக்க வேண்டும், என நீதிபதிகள் உத்தரவிட்டனர். இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் திமுக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுகளை மாநில தேர்தல் ஆணையம் முழுமையாக செயல்படுத்தவில்லை. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி உள்ளாட்சித் தேர்தல் நடத்தவில்லை என்று குற்றம்சாட்டியுள்ள திமுக, வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீட்டை முறையாக பின்பற்றவில்லை என்று மனுவில் குறிப்பிட்டுள்ளது.

மூலக்கதை