அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது: சீனா திடீர் முடிவு

தினகரன்  தினகரன்
அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படாது: சீனா திடீர் முடிவு

பீஜிங்: அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை சீனா நேற்று திடீரென நிறுத்தி வைத்துள்ளது. அமெரிக்கா - சீனா இடையே வர்த்தக போர் உச்சத்துக்கு சென்றதால், சீன பொருட்கள் மீது அமெரிக்கா வரி விதித்தது. தனது நாட்டு ஸ்டீல், அலுமினிய தொழில்களை பாதுகாக்க இந்த நடவடிக்கையை எடுத்ததாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார். இதை தொடர்ந்து பரஸ்பரம் இரண்டு நாடுகளும் பதிலடியாக வரிகளை விதித்து வந்தன. பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படுவதற்கான சூழ்நிலைகள் உருவாகியும், தீர்வு ஏற்படவில்லை. கடந்த 21 மாதங்களாக இந்த வர்த்தகப்போர் நீடித்து வருகிறது.இந்த நிலையில், சில அமெரிக்க ஆட்டோமொபைல், உதிரி பாகங்கள் மீது 5 சதவீதம் மற்றும் 10 சதவீதம் கூடுதல் வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு நேற்று அமலுக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், கூடுதல் வரி விதிக்கும் இந்த முடிவை நிறுத்தி வைத்திருப்பதாக சீன நிதியமைச்சகம் நேற்று திடீரென அறிவித்தது. வர்த்தகப்போர் உடன்பாட்டுக்கு வருவதன் முதல் கட்ட நடவடிக்கையாக, சீன பொருட்கள் மீது விதிக்க இருந்த வரி விதிப்பை டிரம்ப் ரத்து செய்துள்ளார். இதைத்தொடர்ந்துதான் வரி விதிப்பு முடிவை நிறுத்தி வைத்ததாக சீனா அறிவித்துள்ளது.

மூலக்கதை