ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019

தினமலர்  தினமலர்
ஆஸ்திரேலிய அணி இமாலய வெற்றி | டிசம்பர் 15, 2019

பெர்த்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அசத்திய ஆஸ்திரேலிய அணி 296 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பகலிரவு ஆட்டமாக பெர்த்தில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 416, நியூசிலாந்து 166 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில், 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட்டுக்கு 167 ரன்கள் எடுத்திருந்தது. மாத்யூ வேட் (8), கம்மின்ஸ் (1) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவுத்தீ அபாரம்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு பட் கம்மின்ஸ் (13), மாத்யூ வேட் (17) நிலைக்கவில்லை. மிட்சல் ஸ்டார்க் (23) ஓரளவு கைகொடுத்தார். இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 9 விக்கெட்டுக்கு 217 ரன்கள் எடுத்து ‘டிக்ளேர்’ செய்தது. நியூசிலாந்து சார்பில் டிம் சவுத்தீ 5, நீல் வாக்னர் 3 விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்டார்க் ‘வேகம்’: பின், 468 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு ஆஸ்திரேலிய பவுலர்கள் தொல்லை தந்தனர். ஸ்டார்க் ‘வேகத்தில்’ ஜீத் ராவல் (1), ராஸ் டெய்லர் (22) வெளியேறினர். நாதன் லியான் ‘சுழலில்’ டாம் லதாம் (18), கேப்டன் வில்லியம்சன் (14), ஹென்றி நிக்கோல்ஸ் (21) சிக்கினர். கம்மின்ஸ் பந்தில் கோலின் டி கிராண்ட்ஹோம் (33), மிட்சல் சான்ட்னர் (0) அவுட்டாகினர். பென் வாட்லிங் (40) ஆறுதல் தந்தார். டிம் சவுத்தீ (4), நீல் வாக்னர் (8) சொற்ப ரன்னில் ‘பெவிலியன்’ திரும்பினர்.

இரண்டாவது இன்னிங்சில் நியூசிலாந்து அணி 171 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’ தோல்வியடைந்தது. பெர்குசன் (1) அவுட்டாகாமல் இருந்தார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க், லியான் தலா 4, கம்மின்ஸ் 2 விக்கெட் கைப்பற்றினர்.

இதனையடுத்து ஆஸ்திரேலிய அணி 1–0 என, முன்னிலை பெற்றது. ஆஸ்திரேலியாவின் ஸ்டார்க் ஆட்ட நாயகன் விருது வென்றார். இரண்டாவது டெஸ்ட் மெல்போர்னில் வரும் 26ல் துவங்குகிறது.

மூலக்கதை