'உங்க வீட்டு பிள்ளை!'வீடு தேடி, வேட்பாளர்கள் பராக்... பராக்: உள்ளாட்சி மனு தாக்கல் இன்று நிறைவு

தினமலர்  தினமலர்
உங்க வீட்டு பிள்ளை!வீடு தேடி, வேட்பாளர்கள் பராக்... பராக்: உள்ளாட்சி மனு தாக்கல் இன்று நிறைவு

திருப்பூர்,:ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான மனு தாக்கல் இன்று நிறைவு பெறுகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றியம் மற்றும் மாவட்ட ஊராட்சி வார்டுகளில் போட்டியிட உள்ள அ.தி.மு.க., - தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சிகளை சேர்ந்த வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்ய உள்ளனர். 'நான் உங்கள் வீட்டு பிள்ளை' என்ற வசனங்கள் பொழிய, வேட்பாளர்கள் வீடு வீடாக, ஓட்டுக் கேட்க உள்ளனர்.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 9-ம் தேதி துவங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில், 27ம் தேதி, முதல் கட்டமாக, திருப்பூர், ஊத்துக்குளி, காங்கயம், பல்லடம், வெள்ளகோவில், மூலனுார் மற்றும் தாராபுரம் ஆகிய ஏழு ஒன்றியங்கள்; 30ம் தேதி, இரண்டாம் கட்டமாக, அவிநாசி, பொங்கலுார், குண்டடம், குடிமங்கலம், உடுமலை மற்றும் மடத்துக்குளம் ஆகிய ஆறு ஒன்றியங்களிலும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.அதன் வாயிலாக, 17 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள்; 170 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள்; 265 ஊராட்சி மன்ற தலைவர்கள்; 2295 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர். மொத்தம், ஒன்பது லட்சத்து, 95 ஆயிரத்து, 765 வாக்காளர்கள், இவர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
மனுத்தாக்கல், சில நாட்களாக தீவிரமாக நடந்தாலும், ஊராட்சி ஒன்றிய வார்டுகளில், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகியன, கூட்டணிக்கட்சியினரோடு, வார்டு ஒதுக்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தையை முடிக்காமல் இருந்தன. தற்போதுதான், இவை முடிவுக்கு வந்திருக்கின்றன.மாவட்ட ஊராட்சி வார்டுகளில், கூட்டணிக்கட்சியினருக்கு எந்த வார்டையும் அ.தி.மு.க., ஒதுக்கவில்லை.
அதேசமயம், கூட்டணிக்கட்சியினருக்கு, தி.மு.க., வார்டுகளை ஒதுக்கியிருக்கிறது.ஊராட்சி தலைவர், உறுப்பினர் தேர்தலில் மட்டுமல்லாது ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு தேர்தல்களிலும், சுயேச்சைகள் பலர் களமிறங்கியுள்ளனர்.மாவட்டத்தில், நேற்றுவரை, மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, 45; ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு, 448; கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு, 861; கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, 3 ஆயிரத்து 552 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
அ.தி.மு..க., - தி.மு.க., மற்றும் கூட்டணிக்கட்சி வேட்பாளர்கள் இன்றுதான் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இதனால், மனுக்கள் பெறப்படும், ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் களைகட்டும். மனு தாக்கல் செய்த கையோடு, பிரசாரத்தை தீவிரப்படுத்த வேட்பாளர்கள் திட்டமிட்டுள்ளனர். 'நான், உங்கள் வீட்டு பிள்ளை' என்று கையேந்தி, வீடு, வீடாக, பொதுமக்களைத் தேடி, வேட்பாளர்கள் வலம் வர உள்ளனர்.நாளை வேட்பு மனுக்கள் பரிசீலிக்கப்படும். 19ம் தேதி, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.களத்திலும் தீவிரமாக சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளவும் திட்டுமிட்டுள்ளனர்.
விதிமீறல்கள் தொடருமா!
ஆளுங்கட்சியினராகட்டும்; பிற கட்சியினராகட்டும். மனு தாக்கலின்போது விதிமுறைகளைக் கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தங்கள் பலத்தை காட்டும் வகையில், ஊரையே திரட்டி வந்து மனு தாக்கல் செய்யும் சம்பவங்கள் நடப்பதால், மனு தாக்கலின்போது 'களேபரங்களுக்கு' பஞ்சம் இல்லை. இன்று, அ.தி.மு.க., - தி.மு.க., உட்பட கட்சியினர் மனு தாக்கல் செய்ய உள்ளனர். விதிமுறை மீறுவோர் மீது, அதிகாரிகள், நடவடிக்கை எடுக்கத் தயங்குவதால், னிதிமீறல்கள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.

மூலக்கதை