பஞ்சர்! மழையால் புதுச்சேரி முக்கிய சாலைகள்... தினமும் போராடும் வாகன ஓட்டிகள்

தினமலர்  தினமலர்
பஞ்சர்! மழையால் புதுச்சேரி முக்கிய சாலைகள்... தினமும் போராடும் வாகன ஓட்டிகள்

புதுச்சேரி : புதுச்சேரியில் சமீபத்தில் பெய்த தொடர் மழையால், நகரில் முக்கிய சாலைகள் அனைத்தும் குண்டும், குழியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

அக்டோபர் மாதத்தில் துவங்கிய வடகிழக்கு பருவ மழை புதுச்சேரியில் எதிர்பார்த்த அளவில் பெய்யவில்லை. ஆனாலும், வெப்பச் சலனம் காரணமாக கடந்த மாத இறுதியில் மழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக, நவ., 27ம் தேதி 30 செ.மீ., அளவில் கடும் மழை பெய்ததால், புதுச்சேரி சாலைகளில் தண்ணீர் ஆறாக பெருக்கெடுத்தது.இ.சி.ஆரில் சிவாஜி சதுக்கம், புஸ்ஸி வீதி, லெனின் வீதி, இந்திரா சிக்னல், நுாறடி சாலை, காமராஜர் சாலை, அண்ணா சாலைகளில் தண்ணீர் ஆறுபோல் ஓடியது.

வாகன ஓட்டிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டனர். வாகனங்கள் அனைத்தும் தண்ணீரில் நீந்தியபடி சென்றன. பல இடங்களில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.முதலியார்பேட்டை, பாக்கமுடையான்பட்டு, கிருஷ்ணா நகர், முருங்கப்பாக்கம், சுதானா நகர் உள்ளிட்ட நகரின் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. மக்கள் அவதியடைந்தனர்.


புதுச்சேரியில் தொடர் மழை காரணமாக நகர பகுதி மற்றும் நகரின் வெளிப்புற பகுதியில் சாலைகள் ஆங்காங்கே, சேதமடைந்து குண்டும், குழியுமாக மாறியுள்ளது. புதுச்சேரி - கடலுார் சாலை, நுாறடி சாலையில் இந்திரா சதுக்கம், மரப்பாலம், வில்லியனுார் சாலை, விழுப்புரம் சாலை என, அனைத்து சாலைகளிலும் பல இடங்களில் மெகா சைஸ் பள்ளங்கள் ஏற்பட்டும், ஜல்லி கற்கள் பெயர்ந்தும் உள்ளதால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இருசக்கர வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் கீழே விழுந்து விபத்துக்குள்ளாகி வருகின்றனர்.நகரப் பகுதியில் மட்டுமல்லாமல், கிராமப் பகுதிகளிலும் சாலைகள் சேதமடைந்துள்ளன.

மழையால் சேதமான சாலைகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, பொதுப்பணித் துறை அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். ஆனாலும் இதுவரை பணியில் துரிதம் காட்டாததால் பொதுமக்கள் அவதி தொடர்கிறது. எனவே, சேதமடைந்துள்ள சாலைகளை போர்க் கால அடிப்படையில் சீரமைப்பதற்கு, பொதுப்பணித்துறையும், உள்ளாட்சித் துறையும் இணைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

மூலக்கதை