கடைசி! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று...தேர்தல் பணியில் 21 ஆயிரம் பேர்

தினமலர்  தினமலர்
கடைசி! வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று...தேர்தல் பணியில் 21 ஆயிரம் பேர்

கடலுார் : உள்ளாட்சித் தேர்தல் வேட்பு மனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள். கடந்த ஆறு நாட்களில் 12 ஆயிரத்து 236 பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வரும் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதைத் தொடர்ந்து மனு தாக்கல் கடந்த 9ம் தேதி முதல் துவங்கி, நடந்து வருகிறது.மனுக்கள் அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பெறப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஆறாவது நாளில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 29 பேரும், ஒன்றிய உறுப்பினர் பதவிக்கு 282 பேரும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 558 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 2,444 பேரும் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இதுவரை 12 ஆயிரத்து 236 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.இன்று மனுத் தாக்கல் செய்ய கடைசி நாள். நாளை 17 ம் தேதி வேட்பு மனு பரிசீலனை செய்யப்படும். வேட்பு மனுக்கள் 19ம் தேதி திரும்ப பெறும் நாளாகும். முதல் கட்ட தேர்தல் 27 ம் தேதி, 2ம் கட்ட தேர்தல் 30ம் தேதி நடக்கிறது.ஓட்டு எண்ணிக்கை ஜன., 2ம் தேதி நடக்கிறது. 4ம் தேதியுடன் தேர்தல் நடவடிக்கை முடிவு பெறுகிறது. ஜனவரி 6 ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம ஊராட்சி தலைவர்களின் முதல் கூட்டம் நடத்தப்படும்.

ஜன. 11ம் தேதி மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர் மற்றும் கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்ந்தெடுப்பர்.தேர்தலை நடத்த மாவட்ட நிர்வாகம் முழுவீச்சில் ஏற்பாடுகளை செய்து வருகிறது. அதன் ஒரு கட்டமாக ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று பயிற்சி அளிக்கப்பட்டது.

கடலுார் செயின்ட்ஜோசப் பள்ளி, வடலுார் வள்ளலார் குருகுலம் மேல்நிலைப்பள்ளி, விருத்தாசலம் விருத்தாம்பிகை தொழில்நுட்ப கல்லுாரி ஆகிய இடங்களில் நடந்த வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பை கலெக்டர் அன்புச்செல்வன் பார்வையிட்டார்.பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:மாவட்டத்தில் 683 ஊராட்சிகள், 14 ஊராட்சி ஒன்றியங்கள், ஒரு மாவட்ட ஊராட்சி 6,038 பதவிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும், 2,888 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

21 ஆயிரம் பணியாளர்கள் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர்.இவர்களுக்கு மூன்று கட்டங்களாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. வாக்கு எண்ணும் மையங்களுக்காக 14 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க உரிய பாதுகாப்பு அளிக்கப்படும்.தேர்தல் சம்பந்தமான புகார்களை கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறையில் உள்ள தொலைபேசி 1800 425 5121 என்ற இலவச எண்ணிலும் மற்றும் 04142-230124 என்ற எண்ணில் தெரிவிக்கலாம்.

ஓட்டுப் பெட்டிகள் பாதுகாப்பாக வைக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் போதிய பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இதுவரை 12,236 வேட்பு மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 536 பதற்றமான ஓட்டுச்சாவடிகள் கண்டறியப்பட்டு, கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியவர்கள் வாக்களிக்க ஏதுவாக ஓட்டுச்சாவடி மையங்களில் போதிய வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு கலெக்டர் கூறினார்.

மூலக்கதை