துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவேசம் நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன்: அமித்ஷாவுக்கு ரத்த கடிதம்

தினகரன்  தினகரன்
துப்பாக்கி சுடுதல் வீராங்கனை ஆவேசம் நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போடுகிறேன்: அமித்ஷாவுக்கு ரத்த கடிதம்

லக்னோ: ‘நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கில் போட தயாராக இருக்கிறேன். அந்த தண்டனையை நிறைவேற்ற எனக்கு அனுமதி கொடுங்கள்,’ என்று துப்பாக்கி  சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு  ரத்தத்தில் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் ஓடும் பேருந்தில்  மருத்துவ மாணவி நிர்பயா கொடூரமாக பலாத்காரம் செய்யப்பட்டு ஓடும் பேருந்தில்  இருந்து தூக்கி வீசப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்  சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த கொடூரத்தை செய்த குற்றவாளிகள்4 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களின் தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக செய்யப்பட்டு வருகின்றன.இந்நிலையில், இவர்களின் தண்டனை நிறைவேற்றுவதற்கு டெல்லி திகார் சிறையில் தூக்கில் போடும் ஊழியர் இல்லை. அதனால், நாட்டின் மற்ற சிறைகளில் இருந்து அவரை வரவழைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில்,  இந்த குற்றவாளிகளை தூக்கில் போடும் வாய்ப்பை தனக்கு வழங்கும்படி, சர்வதேச  துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை வர்த்திகா சிங், மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷாவுக்கு தனது ரத்தத்தால் கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர்,  `நிர்பயா குற்றவாளிகளை நான் தூக்கிலிட விரும்புகிறேன். அந்த வாய்ப்பை எனக்கு தர  வேண்டும். இதன்மூலம், பாலியல் குற்றவாளிகள் இந்தியாவில்  பெண்ணால்  தூக்கிலிடப்படுவதை  உலகம் அறிந்து கொள்ளும். பெண் வீராங்கனைகள், நடிகைகள்,  பெண் எம்பி.க்கள் மற்றும் எம்எல்ஏ.க்கள் எனக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது,  சமூகத்தில் பெண்களை தெய்வமாக மதிக்கும் மாற்றத்தை மீண்டும் கொண்டு வரும்  என்று நம்புகிறேன்,’ என கூறியுள்ளார்.\'நிர்பயாவின் தாயார் புதிய வேண்டுகோள்\'பலாத்காரத்தால் நிர்பயா கொல்லப்பட்டு, இன்றுடன்  7 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்நிலையில், ‘குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை உரிய நேரத்தில் நிறைவேற்றி, எங்களுக்கு நீதி  கிடைக்கச் செய்ய வேண்டும்,’ என்று நிர்பயாவின் தாயார் கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், குற்றவாளிகளுக்கு எப்போது மரண தண்டனை வழங்கப்படும் என்ற செய்தியை கேட்க  காத்திருக்கிறோம். அவர்களை தூக்கிலிடுவதின் மூலமே நிர்பயாவுக்கு நீதி  கிடைக்கும். இந்த வழக்கில், கருணைக்  கடிதம் அனுப்புவது, சீராய்வு மனு தாக்கல் செய்வது குறிப்பிட்ட  காலத்திற்குள் செய்யப்படவில்லை,’’ என்றார்.\'தண்டனை தருவது 32% குறைந்துள்ளது\'தேசிய  குற்ற ஆவண காப்பகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், நிர்பயா மரணத்துக்கு  பிறகு சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு உள்ள போதிலும், பாலியல் குற்றங்களில் ஈடுப்பட்டவர்களுக்கு தண்டனை பெற்றுத் தருவது 32.2 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த 2017ல் விசாரணைக்கு வந்த 1 லட்சத்து 46 ஆயிரத்து 201  வழக்குகளில் 5,822 வழக்குகளில் மட்டுமே தண்டனை அளிக்கப்பட்டுள்ளது. வழக்குகளை போலீசார் நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்லாததும், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததுமே காரணம்,’ என கூறப்பட்டுள்ளது.

மூலக்கதை