பிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி

தினகரன்  தினகரன்
பிலிப்பைன்சில் மீண்டும் பூகம்பம்: கட்டிடம் இடிந்து குழந்தை பலி

மணிலா: பிலிப்பைன்ஸ் தீவில் நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த பூகம்பத்தில் கட்டிடம் இடிந்து விழுந்து குழந்தை ஒன்று பலியானாது. 30க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் பிலிப்பைன்சில் உள்ள மின்டோனா தீவில் நேற்று காலை பயங்கர பூகம்பம் ஏற்பட்டது. இதனால், கட்டிடங்கள் குலுங்கின. மக்கள் அச்சமடைந்து வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். பிரபல தாவோ நகரில் பூகம்பத்தால் அச்சமடைந்த மக்கள் விடுதிகள், ஓட்டல்களில் இருந்து வெளியேறினார்கள். பல இடங்களில் வீடுகள் இடிந்து விழுந்தன. இடிபாடுகளில் சிக்கி குழந்தை ஒன்று உயிரிழந்தது. காயமடைந்த 24 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். லேசான காயங்களுடன் 13 பேர் மீட்கப்பட்டுள்ளனர். கட்டிடங்கள் இடிந்த இடங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.தாவோ நகரில் இருந்து 90 கிலோமீட்டர் தொலைவை மையமாக வைத்து உருவான இந்த பூகம்பம் ரிக்டர் அளவுகோளில் 6.8 புள்ளிகளாக பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த பூகம்பத்தால் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. தாவோவில் இருந்த பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டியூடர்டி மற்றும் அவரது மனைவி ஆகியோரும் பூகம்பத்தில் சிக்கியுள்ளனர். அதிர்ஷ்டவசமாக அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.  மின்டோனா தீவில் கடந்த அக்டோபரில் அடுத்தடுத்து மூன்று முறை ஏற்பட்ட பூகம்பத்தில் 20க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். வீடுகள், அலுவலக கட்டிடங்கள், பள்ளிகள் மிகுந்த சேதமடைந்தது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை