காசநோய், தொழுநோய், மலேரியா மாத்திரைகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் விலை 50 சதவீதம் உயர்வு: ‘கம்பெனி லாபத்துக்காக’ நடவடிக்கை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
காசநோய், தொழுநோய், மலேரியா மாத்திரைகள் உட்பட அத்தியாவசிய மருந்துகள் விலை 50 சதவீதம் உயர்வு: ‘கம்பெனி லாபத்துக்காக’ நடவடிக்கை: பொதுமக்கள் கடும் அதிர்ச்சி

புதுடெல்லி: பொதுமக்களுக்கு  அவசியம் பயன்படும் முக்கிய மருந்துகளின் விலை உச்சரவரம்பை 50 சதவீதம் உயர்த்தி, தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் அறிவித்துள்ளது. மருந்து விலை கட்டுப்பாட்டு கொள்கையின்படி, பொதுமக்களுக்கு அத்தியாவசியம் பயன்படுத்தக்கூடிய மருந்துகளின் விலையை தேசிய மருந்து விலை கட்டுப்பாட்டு ஆணையம் (என்பிபிஏ) நிர்ணயித்து வருகிறது.  இவ்வாறு விலை கட்டுப்பாட்டுக்குள் இருந்தாலும், சில மருந்துகளில் புதிய மருந்து கலவைகளை சேர்த்து வேறு பெயரில் அதிக விலைக்கு நிறுவனங்கள் விற்றன. நோயாளிகள் ஒன்றுக்கு மேற்பட்ட மருந்துகள் உட்கொள்வதை தவிர்க்கும் வகையில் இத்தகைய மருந்துகள் வெளியிடப்படுவதாக தெரிவித்தன. இது பெரும் சர்ச்சையைஏற்படுத்தியது. இந்நிலையில், அத்தியாவசிய மருந்துகள் சிலவற்றின் விலை உச்சவரம்பை 50 சதவீதம் உயர்த்தி என்பிபிஏ அனுமதி அளித்துள்ளது. இதுகுறித்து இந்த அமைப்பு வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:மருந்து மூலப்பொருட்கள் விலை உயர்ந்ததால், பெரும்பாலான மருந்து நிறுவனங்கள் சில மருந்துகளின் தயாரிப்பை முற்றிலுமாக நிறுத்தி விட்டன. ஏற்கெனவே அத்தியாவசிய மருந்து விலை கட்டுப்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்ட இவை சந்தையில் கிடைக்காததால் மக்கள் வேறு மருந்துகளை நாட வேண்டிய நிலை உள்ளது. எனவே மக்களுக்கு மருந்துகள் இந்த மருந்துகள் தடையின்றி கிடைக்கவும், மருந்து நிறுவனங்களின் நஷ்டத்தை ஈடுகட்டவும் இந்த விலை உயர்வுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. ஒருமுறை அனுமதியாக, தற்போதுள்ள உச்ச விலை வரம்பில் 50 சதவீதம் உயர்த்திக்கொள்ளலாம் என, என்பிபிஏ கடந்த 13ம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் கூறியுள்ளது.மொத்தம் 12 மருந்துகளுக்கு விலை உயர்வு அனுமதி அளிக்கப்படுகிறது. இவை 21 வகையாக பல்வேறு கலவைகளில் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, மலேரியா, காசநோய், தொழுநோய், இதயநோய், கல்லீரல், சிறுநீரக நோய், யானைக்கால் நோய் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து, வைட்டமின் சி மருந்து ஆகியவையும் அடங்கும். மலிவு விலையில் மக்களுக்கு மருந்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே இந்த கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டுள்ளது. ஆனால், மருந்து நிறுவனங்கள் நஷ்டம் கருதி அத்தியாவசிய மருந்துகளின் விலையை உயர்த்த இவ்வாறு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.* 21 வகையான கலவையில் தயாரிக்கப்படும் மருந்துகளின் தற்போதைய விலை உச்சவரம்பில் 50 சதவீதம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.* மலேரியா, காசநோய், தொழுநோய், இதயநோய், கல்லீரல், சிறுநீரக நோய், யானைக்கால்  நோய் மற்றும் நோய் எதிர்ப்பு மருந்து, வைட்டமின் சி மருந்துகள் விலை மேலும் உயரும்.* மூலப்பொருட்கள் விலை உயர்வால் மருந்து உற்பத்தியை சில நிறுவனங்கள் நிறுத்தியதை காரணம் காட்டி, மருந்து விலை உயர்வுக்கு அனுமதி தரப்பட்டுள்ளது.

மூலக்கதை