பார்வையற்றவர்களிடம் தளபதி-64 படக்குழு கறார்.; விஜய்க்கு பகிரங்க கடிதம்

FILMI STREET  FILMI STREET
பார்வையற்றவர்களிடம் தளபதி64 படக்குழு கறார்.; விஜய்க்கு பகிரங்க கடிதம்

தளபதி 64 படக்குழுவினர் மற்றும் விஜய்க்கு தமிழக பள்ளி ஆசிரியர் ஒருவர் பகிரங்கமாக கடிதம் எழுதியிருக்கிறார். இதோ அந்த கடிதம்…

மிக்க நன்றி,தளபதி என்றழைக்கப்படும் நடிகர் திரு. விஜய் அவர்களே!

உங்களின் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு எமது பூவிருந்தவல்லி பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மூன்று நாட்கள் நடைபெற்றது.

பொதுவாகவே எமது பள்ளியில் எந்தவிதப் படப்பிடிப்பையும் அனுமதிக்கக்கூடாது என்பதுதான் அங்கு பயிலும் மாணவர்கள், பணியாற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட அனைவரின் ஒருமித்த கருத்து. ஆனாலும், இதையும் மீறி, அரசியல் செல்வாக்கு, சொந்த செல்வாக்கு என்ற ஏதோ ஒரு காரணத்தில் படப்பிடிப்பிற்கு அனுமதி வாங்கிவிடுகிறீர்கள்.

அதன்பிறகு எமது பள்ளி வளாகம் படும்பாடு அடடா மோசம். ஒரு சிறு தொகையை எங்கோ செலுத்திவிட்டு, இந்த மூன்று நாட்களும் படப்பிடிப்பு என்ற பெயரில் படப்பிடிப்புக்குழு ஏதோ பள்ளியையே விலைக்கு வாங்கிவிட்டதுபோல் எங்கள் மாணவர்கள் மற்றும் பணியாளர்களிடம் நடந்துகொண்டதெல்லாம் பெரு அநியாயம்.

முதலில் எங்கள் மாணவர்களால் தடையின்றிப் பள்ளி வளாகத்தில் நடமாட முடியாதபடிக்கு எங்கு பார்த்தாலும் கார்கள், வாகனங்கள். பள்ளி முதன்மை நுழைவாயிலில் உங்களைப் (நடிகர் விஜை) பார்ப்பதற்கென்றே ஒரு பெருங்கூட்டம்.

உள்ளே இருப்பவர்கள் வெளியேற முடியாது. வெளியே இருந்து வருபவர்கள் உள்ளே நுழைய முடியாதபடிக்கு மூன்று நாட்களும் ஏக கெடுபிடிகள்.

ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களுக்குப் பாடப் புத்தகங்களைப் படித்துக்காட்ட வந்த தன்னார்வலர்களும் (voluntary readers) தடுத்து நிறுத்தப்பட்டு அதில் சிலர் திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். பள்ளி வளாகம் என்கிற புரிதல்கூட இல்லாமல், ஆங்காங்கே புகைபிடிப்பது, குப்பைகள் போடுவது என உங்கள் குழுவினர் மிகவும் அலட்சியமாக நடந்துகொண்டார்கள்.

உங்கள் படப்பிடிப்புக்குழுவின் மேல்மட்ட நபர்களிலிருந்து, கடைநிலைப் பணியாளர்வரை பெரும்பாலான நபர்களுக்குப் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களை எப்படிக் கையாள்வது, அவர்களைக் கண்ணியக் குறைவின்றி எப்படி நடத்துவது என்கிற அடிப்படைப் புரிதலே இல்லை. ஏன் அது உங்களுக்கும் இல்லை என்றே கருதுகிறேன்.

கடந்த சனிக்கிழமையன்று, உங்களைச் சந்தித்து வெறும் இரண்டே நிமிடங்கள் பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்திலும், எதிர்பார்ப்பிலும் எங்கள் பள்ளி மாணவர்கள் சுமார் மூன்று மணி நேரமாகக் குழுமி இருக்க, அவர்களைப் பார்வையுள்ளவர்கள் என்று கருதிக்கொண்டு, சைகை செய்துவிட்டு சென்றுவிட்டீர்கள்.

உங்கள் குழுவினரை அணுகி எங்கள் மாணவர்களில் சிலர் கேட்டதற்கு, “கண்ணு தெரியாத நீ பார்த்து என்ன பண்ணப்போற” எனக் கேவலமாகப் பதில் வந்திருக்கிறது.

கடந்த மூன்று நாட்களாக உங்கள் குழுவினர் எங்கள் நிறுவனத்தின்மீது செலுத்திய ஆக்கிரமிப்புகள், அதிகாரங்கள், அதனால் எங்கள் பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் என இவை அத்தனையையும், மாணவர்கள் உங்கள் மீது இருக்கிற அன்பினாலும், உங்களிடம் இந்த மூன்று நாட்களில் எப்படியேனும் ஒருமுறையாவது பேசிவிடவேண்டும் என்ற ஆர்வத்தினாலும் பொறுத்துக்கொண்டார்கள்.

அவர்கள் ஆசிரியர்களாகிய எங்களுக்கும் பயந்துகொண்டு, அதேநேரத்தில் உங்களையும் சந்திக்கிற இந்த அரிதான வாய்ப்பை நழுவவிடக்கூடாதே என்ற எண்ணத்தில், ஒரு இனம்புரியாத தவிப்புடன் இங்கும் அங்கும் அலைந்துகொண்டிருந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டுவரலாம் என நினைத்து, மாணவர்களை ஒரு இடத்தில் ஒன்றுகூட்டி, உங்களை இரண்டே நிமிடங்கள் பேசவைப்பது என முடிவு செய்தோம்.

அதற்காக ஆசிரியர்கள் இருவர் உங்கள் குழுவினரை அணுகிப் பேசினோம். கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, முதலில் மாலை நான்கு மணிக்கு என்றார்கள். பிறகு ஆறு மணிக்கு என்றார்கள்.

அதிலும் உங்கள் மேலாளர் என்று தன்னை அறிமுகம் செய்துகொண்ட திரு. உதயக்குமார் அவர்கள் கண்டிப்பாக மாலை ஆறுமணிக்குச் சந்திக்கலாம் என்றும், மாணவர்களை ஒருங்கிணைக்குமாறும் கூறிச் சென்றார்.

மாணவர்கள் படப்பிடிப்புத் தளத்திற்கு அருகிலேயே உங்களைச் சந்திக்கும் ஆர்வத்தோடும், விருப்பத்தோடும் மிக அமைதியான முறையில் உங்கள் கண் எதிரே, ஏறத்தாழ ஒன்றரை மணிநேரம் காத்திருந்தார்கள். இயக்குநர் திரு. லோகேஷ் அவர்கள்கூட இரண்டு நிமிடங்கள் வந்து மாணவர்களிடம் பேசிவிட்டுச் சென்றார். ஆனால், நிச்சயம் சந்திக்கிறீர்கள் என்று சொல்லப்பட்ட தாங்கள் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு, இரகசியமாய் கிளம்பிவிட்டீர்கள். நீங்கள் கிளம்பிவிட்டீர்கள் என்பதைக்கூட அறியாமல் நீங்கள் வருவீர்கள் என நம்பிக்கையோடு மேலும் அரைமணி நேரம் எங்கள் மாணவர்கள் காத்துக்கொண்டு நின்ற அவலமும் நடந்தேறியது.

சரி, மாணவர்களை விடுங்கள். தாங்கள் ஒரு பார்வை மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயிலும் பள்ளிக்கு வந்திருக்கிறீர்கள்.

நிச்சயம் சில வினாடிகளாவது அவர்களைச் சந்திக்கவேண்டும், அவர்களிடம் உரையாட வேண்டும் என ஒரு சக மனிதனாக ஏன் உங்களுக்குத் தோன்றவில்லை. எல்லாப் படப்பிடிப்புத் தளங்களைப் போலவே, இதையும் ஒரு சராசரி இடமாக நினைத்துவிட்டீர்களா? அல்லது பார்வையற்ற இவர்கள் நமது ரசிகர் கணக்கில் வரமாட்டார்கள் என்கிற கணக்கா? ஒவ்வொரு ஆண்டும் உங்கள் பிறந்த தினத்தின்போது, சோறுபோட மட்டும் என்கிற பட்டியலில் எங்கள் பள்ளி வைக்கப்பட்டிருக்கிறதா?

ஒரு தனியார்ப் பள்ளியாக இருந்திருந்தால், ஹைஃபை மேடையில் நின்று, மைக் பிடித்து அந்த மாணவர்களிடம் பேசியிருப்பீர்கள்தானே? இல்லாவிட்டால் அந்தப் பள்ளி முதலாளிகள் உங்களை விட்டுவிடுவார்களா என்ன? அரசுப்பள்ளி, அதுவும் பார்வையற்றோர் பள்ளியென்றால் அவ்வளவு குறைவான மதிப்பீடா? ஒரு இரண்டு நிமிடங்கள் பேசுவதில் உங்களுக்கு எத்தனை கோடி இழப்பு வந்துவிடும்?

ஒரு பார்வையுள்ள ரசிகனைப்போல, ஸ்டைல், நடனம், முகபாவனை, மிடுக்கான ஆடை அலங்காரத்தின் வழியே அல்லாமல், வெறும் உங்களின் கோர்வையான வசனங்களால், உங்கள் குரலால் மட்டுமே உங்களின்மீது பிரியமும், பேரன்பும் கொண்டிருக்கிற பார்வை மாற்றுத்திறனாளி ரசிகர்களுக்கு, எல்லாம் வேஷம் என்பதைப் புரியவைத்தமைக்கு மிக்க நன்றி திரு.விஜய் அவர்களே!

இவன் ப. சரவணமணிகண்டன்
தமிழ்ப் பட்டதாரி ஆசிரியர்
பார்வைத்திறன் குறையுடையோருக்கான அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி
பூவிருந்தவல்லி.

Blind School teacher condemns Vijay and Thalapathy 64 team

மூலக்கதை