13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி

தினகரன்  தினகரன்
13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்த மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு: டெல்லி மருத்துவமனையில் அனுமதி

புதுடெல்லி: கடந்த 13 நாட்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் டெல்லி மகளிர் ஆணைய தலைவிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலியல் பலாத்காரம் தொடர்பான சட்டங்களைத் திருத்துவதற்கான கோரிக்கையின் பேரில், டெல்லி மகளிர் ஆணையத் தலைவி சுவாதி மாலிவால், கடந்த 13 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தை டெல்லி ராஜ்கோட்டில் நடத்தி வருகிறார். இவர், 6 மாதங்களுக்குள் பாலியல் பலாத்கார வழக்குகளில் தண்டனை பெற்றவர்களுக்கு மரண தண்டனை விதிக்கக் கோரியிருந்தார்.இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு எழுதிய கடிதத்தில், ‘பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்குவதற்கான ஒரு நிலையான  கட்டமைப்பைக் கோரி காலவரையற்ற உண்ணாவிரதத்தில் இருக்கிறேன். எனது உண்ணாவிரதத்தின் முதல் நாளில் நான் உங்களுக்கு கடிதம் எழுதினேன்.  அனைத்து மகளிர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், நான் உண்ணாவிரதம் இருப்பதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அண்மையில் ஐதராபாத்தில் கால்நடை மருத்துவரை ஒரு கும்பல் பலாத்காரம் செய்து கொன்றது. ராஜஸ்தானைச் சேர்ந்த ஆறு வயது சிறுமியின் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். தற்போதுள்ள சட்டத்தை பலப்படுத்த வேண்டும். கொடூரமான குற்றங்களைத் தடுக்க 6 கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்’ என்று கோரியிருந்தார்.இந்நிலையில், பெண்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் வரை இந்த பிரச்னையை நாடாளுமன்றத்திற்குள் எழுப்ப வேண்டும் எனக்கூறி, கடந்த 13 நாட்களாக உண்ணாவிரத போராட்டம் நடத்தி வரும் சுவாதி மாலிவாலுக்கு திடீரென நேற்றிரவு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. அதையடுத்து, அவர் டெல்லியில் உள்ள லோக் நாயக் மருத்துவமனைக்கு (எல்.என்.ஜே.பி) கொண்டு செல்லப்பட்டு, தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதனால், டெல்லி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

மூலக்கதை