கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது

தமிழ் முரசு  தமிழ் முரசு
கோவை தேக்கம்பட்டியில் யானைகள் புத்துணர்வு முகாம் துவங்கியது

கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பவானி ஆற்றின் கரையில் உள்ள தேக்கம்பட்டியில் கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் இன்று துவங்கியது. இதில் தமிழகம் முழுவதிலும் இருந்து 26 கோயில் யானைகள் பங்கேற்கின்றன.   இந்து அறநிலையத்துறை சார்பில், தமிழகத்தில் உள்ள கோயில் மற்றும் மடங்களில் உள்ள யானைகளுக்கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் கடந்த 2003ம் ஆண்டு முதல் நடத்தப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காட்டில் துவங்கப்பட்ட இந்த யானைகள் நலவாழ்வு முகாம், கடந்த 2012ம் ஆண்டு முதல் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் தேக்கம்பட்டி பவானி ஆற்றங்கரையோரம் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டுக்கான 12வது யானைகள் புத்துணர்வு முகாம் தேக்கம்பட்டியில் இன்று காலை துவங்கியது. இந்த முகாமில், தமிழகம் முழுவதும் இருந்து 26 யானைகள் பங்கேற்கின்றன.

யானைகளுக்காக மொத்தம் 6 ஏக்கர் நிலப்பரப்பில் இம்முகாம் அமைக்கப்பட்டுள்ளது. யானைகள் நடைபயிற்சி மேற்கொள்ள தனி நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.

யானைகளை குளிக்க வைக்க குளியல் மேடை, ஷவர் மேடை தனித்தனியே அமைக்கப்பட்டுள்ளது. இந்த முகாம் 48 நாட்கள் நடக்கிறது.

முகாமில் பங்கேற்பதற்காக முதலாவதாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமாலியதாவும், 2வதாக ஸ்ரீபெரும்புதூர் ஆதிகேசவ பெருமாள் கோவில் யானை கோதையும், 3வதாக பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவில் யானை கஸ்தூரியும், 4வதாக காளையார் கோவில் யானை சொர்ணகாளீஸ்வரர் சொர்ணவல்லியும், 5வதாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் யானை கல்யாணியும், 6வதாக மதுரை கள்ளழகர் கோயில் யானை சுந்தரவல்லி தாயாரும், 7வதாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோயில் யானை அகிலாவும், 8வதாக திருச்சி தாயுமானவர் சுவாமி கோயில் யானை லட்சுமியும் 9வதாக திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயில் யானை ஆண்டாளும் 10வதாக மதுரை மீனாட்சி அம்மன் கோயில் யானை பார்வதியும் வந்து நேற்று மாலை வந்து சேர்ந்தன.

தொடர்ந்து இன்று காலை யானைகள் பவானி ஆற்றில் குளிக்கவைக்கப்பட்டு அலங்கரிக்கப்பட்டன. பின்னர் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு யானைகளுக்கு பசுந்தீவனம் மற்றும் பழங்கள் வழங்கப்பட்டன.

மண் குளியலில் ஈடுபட்ட ஜெயமாலியதா யானை

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமாலியதா புத்தணர்வு முகாமுக்கு நேற்று மதியம் வந்தது.

முகாமுக்கு வந்ததும் அந்த யானை தரையில் படுத்து உருண்டு, மண்ணை தனது உடலில் வாரி இறைத்துக்கொண்டது. இதுபற்றி பாகன் விமல்குமார் கூறுகையில், யானைகளுக்கு காடுகளில் மிகவும் பிடித்தமான ஒரு விஷயம் மண் குளியல்.

காரணம் யானைகளுக்கு வியர்வை சுரப்பிகள் கிடையாது, பொதுவாக உடல் உஷ்ணத்தை குறைக்க வனப்பகுதியில் யானைகள் தங்களுடைய உடலில் சேறும் சகதியுமான மண்ணை எடுத்து பூசிக் கொள்ளும். இதன் மூலமாக யானைகள் தங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ளும்.

எனவேதான் ஜெயமாலியதா யானையும் தன்னுடைய உடலில் சேற்று மண்னை எடுத்துப் பூசி, மண்ணில் உருண்டு விளையாடியது என்றார்.

.

மூலக்கதை