முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் : சேப்பாக்கத்தில் பிற்பகல் 1.30க்கு தொடக்கம்

தினகரன்  தினகரன்
முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா  வெஸ்ட் இண்டீஸ் இன்று மோதல் : சேப்பாக்கத்தில் பிற்பகல் 1.30க்கு தொடக்கம்

சென்னை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று பிற்பகல் 1.30க்கு தொடங்குகிறது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி தலா 3 போட்டிகள் கொண்ட டி20, ஒருநாள் தொடர்களில் விளையாடுகிறது. முதலில் நடந்த டி20 தொடரில் இந்திய அணி 2-1 என்ற கணக்கில் வென்று கோப்பையை கைப்பற்றியது. அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி சென்னையில் இன்று நடைபெறுகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராகக் கடைசியாக விளையாடிய 9 இருதரப்பு ஒருநாள் போட்டித் தொடர்களிலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளதால், இந்த முறையும் ஆதிக்கம் தொடரும் என எதிர்பார்க்கலாம். இந்திய அணியில் தொடக்க வீரர் ஷிகர் தவான், வேகப் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார் இருவரும் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக மயாங்க் அகர்வால், ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளனர். சமீபத்தில் நடந்த டி20 தொடரில் ரோகித் ஷர்மா, கே.எல்.ராகுல் இருவரும் சிறப்பாக விளையாடி உள்ளதால் இவர்களே தொடக்க வீரர்களாக நீடிக்க அதிக வாய்ப்பு உள்ளது.மயாங்க் அகர்வால் அறிமுக வீரராக இடம் பெறுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். ஷ்ரேயாஸ் அய்யர் 4வது இடத்தை தக்கவைத்துக் கொள்வார் என்றே தெரிகிறது. முன்னாள் கேப்டன் அனில் கும்ப்ளேவும் ஷ்ரேயாஸ் 4வது வீரராகக் களமிறங்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது. இளம் விக்கெட் கீப்பர் ரிஷப் பன்ட் சிறப்பாக விளையாடி திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். கேப்டன் மற்றும் அணி நிர்வாகம் அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்றுவாரா என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது. முகமது ஷமி, தீபக் சாஹர் வேகமும், சாஹல் - குல்தீப் சுழல் கூட்டணியும் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். வெஸ்ட் இண்டீஸ் அணியில் காயம் அடைந்துள்ள அதிரடி பேட்ஸ்மேன் எவின் லூயிஸ் களமிறங்குவது கேள்விக்குறியாக உள்ளது. ஹெட்மயர், நிகோலஸ் பூரன், கேப்டன் போலார்டு, ஜேசன் ஹோல்டர், ஷாய் ஹோப் ஆகியோர் அதிரடியாக விளையாடக் கூடியவர்கள் என்பதால் இப்போட்டியில் வாணவேடிக்கைக்கு பஞ்சம் இருக்காது.காட்ரெல், ஹோல்டர், வால்ஷ் ஜூனியரின் பந்துவீச்சு இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சற்று நெருக்கடியை கொடுக்கலாம். எனினும், அனைத்து வகையிலும் வலுவான இந்திய அணியை சமாளிப்பது வெஸ்ட் இண்டீசுக்கு மிகப் பெரிய சவால் தான் என்பதில் சந்தேகமில்லை. மழை பாதிப்பு இல்லாவிட்டால், சுவாரசியமான ஆட்டம் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும். இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), மயாங்க் அகர்வால், கே.எல்.ராகுல், ஷ்ரேயாஸ் அய்யர், மணிஷ் பாண்டே, ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, கேதார் ஜாதவ், ரவீந்திர ஜடேஜா, யஜ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், முகமது ஷமி, ஷர்துல் தாகூர். வெஸ்ட் இண்டீஸ்: கெய்ரன் போலார்டு (கேப்டன்), சுனில் அம்ப்ரிஸ், ஷாய் ஹோப், கேரி பியரி, ரோஸ்டன் சேஸ், அல்ஜாரி ஜோசப், ஷெல்டன் காட்ரெல், பிராண்டன் கிங், நிகோலஸ் பூரன், ஷிம்ரோன் ஹெட்மயர், எவின் லூயிஸ், ரொமாரியோ ஷெப்பர்டு, ஜேசன் ஹோல்டர், கீமோ பால், ஹேடன் வால்ஷ் ஜூனியர்.நேருக்கு நேர்...இரு அணிகளும் 130 முறை மோதியுள்ளதில்... தலா 62  வெற்றிகள் பெற்று சமநிலை வகிக்கின்றன. 2 போட்டி சரிசமனில் (டை) முடிந்துள்ள  நிலையில், 4 ஆட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன. * வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக விளையாடிய ஒருநாள் போட்டிகளில் இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் 418/5 (இந்தூர், 2011). வெஸ்ட் இண்டீசின் அதிகபட்ச ஸ்கோர் 333/8 (ஜாம்ஷெட்பூர், 1983).* இந்திய அணியின் குறைந்தபட்ச ஸ்கோர் 100 ஆல் அவுட் (அகமதாபாத், 1993). வெஸ்ட் இண்டீஸ் 121 ஆல் அவுட் (போர்ட் ஆப் ஸ்பெயின், 1997).* தனிநபர் ரன் குவிப்பில் கோஹ்லி 2146 ரன் (36 போட்டி, 9 சதம்), சச்சின் டெண்டுல்கர் 1573 ரன் (39 போட்டி, 4 சதம்) விளாசி முதல் 2 இடங்களில் உள்ளனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் கிறிஸ் கேல் 1334 ரன் (41 போட்டி, 4 சதம்) விளாசி முன்னிலை வகிக்கிறார்.* விக்கெட் வேட்டையில் வெஸ்ட் இண்டீஸ் வேகம் கோர்ட்னி வால்ஷ் 38 போட்டியில் 44 விக்கெட், இந்தியாவின் கபில் தேவ் 42 போட்டியில் 43 விக்கெட் வீழ்த்தி முதலிடத்தில் உள்ளனர்.

மூலக்கதை