பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி குழுமத்தின் ஆய்வறிக்கை

தினமலர்  தினமலர்
பொருளாதாரத்தில் மெதுவான மீட்சியை காண்கிறோம்:சிங்கப்பூரைச் சேர்ந்த டி.பி.எஸ்., வங்கி குழுமத்தின் ஆய்வறிக்கை

சிங்கப்பூர்:இந்திய பொருளாதாரத்தில், மெதுவான மீட்சியை காண்பதாக சிங்கப்பூரைச் சேர்ந்த, டி.பி.எஸ்., வங்கி குழுமம் தெரிவித்துள்ளது.

தேவைகளை அதிகரிக்க அரசு எடுத்து வரும் அடிப்படை நடவடிக்கைகள் மற்றும் உலகளவில் உள்ள நிலவரங்கள் சரியாகி வருவது உள்ளிட்ட காரணங்களால், அடுத்த நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதாரத்தில், மெதுவான வளர்ச்சி ஏற்படும் என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்நிறுவனம் நாட்டின் நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் என்று கணித்திருந்த நிலையில், சமீபத்தில் அதை, 5 சதவீதமாக குறைத்து அறிவித்தது. மேலும், நடப்பு ஆண்டில், பொருளாதார நடவடிக்கைகளில் சரிவு மற்றும் தொடர்ச்சியான நிதித் துறை அழுத்தங்கள் இருப்பதாகவும், அது தெரிவித்திருந்தது.இந்நிலையில், அடுத்த நிதியாண்டில் மெதுவான வளர்ச்சி ஏற்படும் என்று தெரிவித்துள்ளது.


பணப்புழக்கம்

‘இந்தியா ஆண்டு பார்வை 2020’ எனும் ஆய்வறிக்கையில், டி.பி.எஸ்., நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்திய பொருளாதாரம், கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத வகையில், நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், 4.5 சதவீதமாக இருந்தது. ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில், பொருளாதார வளர்ச்சி, 5 சதவீதமாக இருந்தது. இந்த ஆண்டின் வளர்ச்சி மோசமானதாக இருப்பதாக ஆய்வு குறிகாட்டிகள் தெரிவிக்கின்றன.


இதையடுத்து, நடப்பு நிதியாண்டுக்கான பொருளாதார வளர்ச்சி, 5.5 சதவீதமாக இருக்கும் என்ற கணிப்பை குறைத்து, 5 சதவீதமாக மதிப்பிட்டுள்ளோம்.இருப்பினும், அடுத்த நிதியாண்டுக்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.8 சதவீதமாக அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டுள்ளது.தேவையை அதிகரிக்க எடுக்கப்படும் அடிப்படை நடவடிக்கைகள் மற்றும் பணப்புழக்கம் ஆகியவை இதற்கு உதவும்.

நடவடிக்கை

பட்ஜெட்டில், தேவையை அதிகரிக்க எடுக்கப்படும் முடிவுகள், குறுகிய கால வளர்ச்சிக்கு உதவும் என கருதப்படுகிறது. அரசு செலவினங்கள் அதிகரிப்பு உள்ளிட்டவையும், உற்பத்தியை அதிகரிக்க உதவும்.மேலும், நிதிக் கொள்கைகளும் வளர்ச்சிக்கு கைகொடுக்கும் என கருதுகிறோம்.பலவீனமான வளர்ச்சி, வருவாய் வளர்ச்சியை பாதித்துள்ளது.


வரி வருவாய் ஏற்கனவே குறைந்துள்ளது. இந்நிலையில், அன்னிய முதலீடு உள்ளிட்டவை குறித்து எடுக்கப்படும் கொள்கை முடிவுகள், வருவாயை அதிகரிப்பதற்கு முக்கியமானதாக அமையும்.முதற்கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்த நடவடிக்கைகள் போலவே, இரண்டாவது கட்டத்திலும் சில திட்டங்களை எதிர்பார்க்கிறோம்.

ஜி.எஸ்.டி.,யை எளிமையாக்குவது, வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் துறையை வலுப்படுத்துவது, திவால் சட்டத்தை கடுமையாக்குவது உள்ளிட்டவற்றை எதிர்பார்க்கிறோம்.ரிசர்வ் வங்கியின் நிதிக் கொள்கையைப் பொறுத்தவரை, அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துக்குள், 0.50 சதவீதம் அளவுக்கு வட்டி குறைப்பை எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை