உள்ளாட்சியில் குறைந்த இடங்கள் ஒதுக்கீடு மாவட்டங்களில் அதிமுக கூட்டணி முறிவு?

தமிழ் முரசு  தமிழ் முரசு
உள்ளாட்சியில் குறைந்த இடங்கள் ஒதுக்கீடு மாவட்டங்களில் அதிமுக கூட்டணி முறிவு?

சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ளாட்சி பதவிகளில் குறைந்த இடங்களை கூட்டணிக்கு ஒதுக்குவதால், பல மாவட்டங்களில் பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் தனித்து களம் இறங்கியுள்ளன. இது தொடரும் பட்சத்தில் கூட்டணியில் பெரிய அளவில் விரிசல் ஏற்படும் என்று தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக, பாஜ, தேமுதிக, தமாகா, சமத்துவ மக்கள் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

உள்ளாட்சித் தேர்தல் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர். அன்றே கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு விடுத்தனர்.

மொத்தமாக கூட்டணி கட்சிகளின் தலைவர்களை கட்சி அலுவலகத்துக்கு வரவழைத்து ஒவ்வொருவரையும் அழைத்து பேசினர். ஏதோ, தனியார் கம்பெனிக்கு ஊழியர்களை இன்டர்வியூ செய்வதுபோல அழைத்து பேசியது கூட்டணி கட்சிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

அப்போது, உள்ளாட்சித் தேர்தல் என்பதால் கூட்டணி கட்சிகளுக்கு உள்ளூர் செல்வாக்கிற்கு ஏற்றார்போல மாவட்ட அளவில் தொகுதிகளை கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.

உங்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் வழங்கப்படும் என்று கூறி அனுப்பி விட்டனர். இதை மாவட்ட நிர்வாகிகளிடம் கூட்டணி கட்சியினர் தெரிவித்தனர்.

கூட்டணிக் கட்சியினர் மாவட்டங்களில் அமைச்சர்கள் மற்றும் மாவட்டச் செயலாளர்களிடம் ஆலோசனை நடத்தினர்.

அப்போது 75 சதவீத இடங்களில் அதிமுக போட்டியிடும். 25 சதவீதம் மட்டுமே கூட்டணிக்கு வழங்கப்படும்.

அதில் வட மாவட்டங்களில் பாமகவுக்கு 15 சதவீதம், பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுக்கு சேர்ந்து 10 சதவீதம் வழங்கப்படும். கன்னியாகுமரி, கோவை போன்ற மாவட்டங்களில் பாஜகவுக்கு 15 சதவீதம் மற்ற கட்சிகளுக்கு அங்கு 5 முதல் 10 சதவீதம் வழங்கப்படும் என்று அறிவித்து விட்டனர்.

இது பாமக, தேமுதிக, பாஜக கட்சிகளுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் தலைமை கூட்டணியில் இருக்க வேண்டும் என்று கூறியதால் பல மாவட்டங்களில் அதிமுக போட்டியிடும் இடங்களில் கூட்டணிக் கட்சியினர் சுயேட்சையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் பேச்சுவார்த்தை முடியாததால், கூட்டணிக் கட்சி சார்பிலும் வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கூட்டணி பேச்சுவார்த்தை முடிந்தால், உடன்பாடு ஏற்பட்ட பிறகு மனுவை வாபஸ் பெறலாம் என்று கூட்டணிக் கட்சியின் தலைமை அறிவித்துள்ளதால், ஒரு பதவிக்கு அதிமுகவும், கூட்டணிக் கட்சியினரும் மனு தாக்கல் செய்துள்ளனர். பல மாவட்டங்களில் கூட்டணியில் மோதல் ஏற்பட்டு மாவட்ட நிர்வாகிகளே தனித்து போட்டி என்று அறிவித்து விட்டனர்.

ஈரோடு மாவட்டம் பெருந்துறை, பவானி, அந்தியூர், கோபி, பவானிசாகர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய ஈரோடு வடக்கு மாவட்டத்தில் 9 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன.

மேலும், 14 மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதில், பாஜவுக்கு ஒன்றிய அளவில் தலா 2 இடங்களும், 4 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் பதவிக்கான இடங்களும் அதிமுகவிடம் கேட்கப்பட்டது.

இதற்கு அதிமுக தரப்பில் பாஜவுக்கு பெருந்துறை மற்றும் பவானிசாகர் பகுதியில் தலா ஒரு ஊராட்சி குழு உறுப்பினர் இடங்கள் மட்டும் தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பவானி, அந்தியூர், கோபி சட்டமன்ற தொகுதிகளில் ஒரு இடம்கூட வழங்க முடியாது என திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. எதிர்பார்த்த இடங்கள் வழங்காததால் பாஜ கடும் அதிருப்தியில் உள்ளது.

பாஜ மாநில தேர்தல் பார்வையாளர் பழனிச்சாமி தலைமையில் மாவட்ட தலைவர் சித்தி விநாயகம், மாநில செயற்குழு உறுப்பினர் மோகன்குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பணன் ஆகியோரிடம் கடந்த இரு நாட்களாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருப்பினும் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இதனால், அனைத்து ஒன்றியங்களிலும் ஊராட்சி குழு உறுப்பினர் பதவிகளுக்கும், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கும் பாஜ தனித்து போட்டியிட முடிவு செய்யப்பட்டுள்ளது. வெற்றி வாய்ப்புள்ள ஊராட்சித் தலைவர் பதவிக்கும் பாஜவினரை சுயேச்சையாக களமிறக்கவும் முடிவு எடுத்துள்ளனர்.

ஈரோடு வடக்கு மாவட்டத்தைப் போல கன்னியாகுமரி, கோவை, திருப்பூர், நெல்லை மாவட்டங்களிலும் மோதல் எழுந்துள்ளது.

அதேபோல, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், வேலூர் மாவட்டங்களில் பாமகவுடன் இன்னும் பேச்சுவார்த்தை முடியாமல் மோதல் நீடித்து வருகிறது. மாநிலம் முழுவதும் தேமுதிகவினரை அதிமுகவினர் கண்டு கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

இதனால் மாநிலம் முழுவதும் பல இடங்களில் அதிமுகவினரை எதிர்த்து கூட்டணிக் கட்சியினரே போட்டியிடஉள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மாவட்ட அளவில் கூட்டணியும் முறியும் நிலை உருவாகியுள்ளது.

.

மூலக்கதை