மழையால் மீண்டும் தொல்லை | டிசம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
மழையால் மீண்டும் தொல்லை | டிசம்பர் 13, 2019

ராவல்பிண்டி: பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்டில் 3ம் நாள் ஆட்டம், மழை மற்றும் போதி வெளிச்சமின்மை காரணமாக 5.2 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில் கைவிடப்பட்டது.

பாகிஸ்தான் சென்றுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ராவல்பிண்டியில் நடக்கிறது. இரண்டாம் நாள் முடிவில், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 263 ரன்கள் எடுத்திருந்தது. தனஞ்செயா டி சில்வா (72), குசால் பெரேரா (2) அவுட்டாகாமல் இருந்தனர்.

மூன்றாம் நாள் ஆட்டம், மழை மற்றும் ஆடுகள ஈரப்பதம் காரணமாக தாமதமாக துவங்கியது. முதல் ‘செசன்’ நடக்கவில்லை. உணவு இடைவேளைக்கு பின், முதல் இன்னிங்சில் இலங்கை அணி 6 விக்கெட்டுக்கு 282 ரன்கள் எடுத்திருந்த போது, போதிய வெளிச்சமின்மையால் 3ம் நாள் ஆட்டம் முன்னதாகவே முடிவுக்கு வந்தது. வெறும் 27 நிமிடம் மட்டுமே போட்டி நடந்தது. தனஞ்செயா டி சில்வா (87), குசால் பெரேரா (6) அவுட்டாகாமல் இருந்தனர்.

இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், முதல் இன்னிங்ஸ் முழுமையாக முடியாத காரணத்தினால் இப்போட்டி ‘டிரா’வில் முடிய அதிக வாய்ப்பு உள்ளது.

மூலக்கதை