மிட்சல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு | டிசம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
மிட்சல் ஸ்டார்க் அபார பந்துவீச்சு | டிசம்பர் 13, 2019

பெர்த்: முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மிட்சல் ஸ்டார்க் ‘வேகத்தில்’ மிரட்ட, நியூசிலாந்து பேட்ஸ்மேன்கள் ரன் சேர்க்க முடியாமல் திணறினர்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பகலிரவு ஆட்டமாக பெர்த்தில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் (110), டிராவிஸ் ஹெட் (20) அவுட்டாகாமல் இருந்தனர்.

ஹெட் அரைசதம்: இரண்டாம் நாள் ஆட்டத்தில் முதல் இன்னிங்சை தொடர்ந்த ஆஸ்திரேலிய அணிக்கு மார்னஸ் லபுசேன் (143) நம்பிக்கை தந்தார். பொறுப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் (56) அரைசதம் கடந்தார். கேப்டன் டிம் பெய்ன் (39), மிட்சல் ஸ்டார்க் (30), பட் கம்மின்ஸ் (20) ஓரளவு கைகொடுத்தனர்.

முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 416 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. நியூசிலாந்து சார்பில் சவுத்தீ, வாக்னர் தலா 4 விக்கெட் வீழ்த்தினர்.

ஸ்டார்க் ‘வேகம்’: பின் முதல் இன்னிங்சை துவக்கிய நியூசிலாந்து அணிக்கு மிட்சல் ஸ்டார்க் தொல்லை தந்தார். இவர் வீசிய ஆட்டத்தின் முதல் ஓவரில் டாம் லதாம் ‘டக்–அவுட்’ ஆனார். ஹேசல்வுட் ‘வேகத்தில்’ ஜீத் ரவால் (1) போல்டானார். தொடர்ந்து மிரட்டிய ஸ்டார்க் பந்தில் கேப்டன் கேன் வில்லியம்சன் (34), ஹென்றி நிக்கோல்ஸ் (7), நீல் வாக்னர் (0) அவுட்டாகினர். நிதானமாக ஆடிய ராஸ் டெய்லர் அரைசதம் கடந்தார்.

இரண்டாம் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுக்கு 109 ரன்கள் எடுத்து, 307 ரன்கள் பின்தங்கி உள்ளது. டெய்லர் (66) அவுட்டாகாமல் உள்ளார். ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 4 விக்கெட் கைப்பற்றினார்.

மூலக்கதை