ரூ. 2 கோடி பட்டியலில் மேக்ஸ்வெல் | டிசம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
ரூ. 2 கோடி பட்டியலில் மேக்ஸ்வெல் | டிசம்பர் 13, 2019

மும்பை: ஐ.பி.எல்., தொடரின் ஏலத்தில் பங்கேற்கும் இறுதிக்கட்ட 332 வீரர்கள் விவரம் வெளியானது. ஆஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன் ரூ. 2 கோடி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

இந்தியன் பிரிமியர் லீக் (ஐ.பி.எல்.,) ‘டுவென்டி–20’ தொடரின், 13வது சீசன் அடுத்த ஆண்டு நடக்கவுள்ளது. இதற்கான வீரர்கள் ஏலம் வரும் 19ம் தேதி கோல்கட்டாவில் நடக்கும். சமீபத்தில், ஒவ்வொரு அணிகள் சார்பில் தக்கவைக்கப்பட்ட, விடுவிக்கப்பட்ட வீரர்கள் பட்டியல் வெளியானது. 73 இடங்களுக்கு மொத்தம் 997 வீரர்கள் தங்களின் பெயர்களை பதிவு செய்திருந்தனர்.

தற்போது, இதிலிருந்து 332 வீரர்கள் இறுதி செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவிலிருந்து 186, வெளிநாட்டிலிருந்து 143, உறுப்பு நாடுகளிலிருந்து 3 வீரர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. ரூ. 2 கோடி அடிப்படை விலையில், ஆஸ்திரேலியாவின் கம்மின்ஸ், ஹேசல்வுட், கிறிஸ் லின், மிட்சல் மார்ஷ், மேக்ஸ்வெல், தென் ஆப்ரிக்காவின் ஸ்டைன், இலங்கையின் மாத்யூஸ் என 7 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

வேகப்பந்துவீச்சாளர் ஹேசல்வுட் ஐ.பி.எல்., தொடரில் இதுவரை விளையாடியது இல்லை. இப்பட்டியலில் ஒருவர் கூட இந்தியர் இல்லை.

ரூ. 1.5 கோடி அடிப்படை தொகையில், இந்தியா சார்பில் ராபின் உத்தப்பா மட்டும் உள்ளார். இந்தியாவின் பியுஸ் சாவ்லா, யூசுப் பதான், உனத்கட் உள்ளிட்டோருக்கு அடிப்படை விலை ரூ. 1 கோடியாக உள்ளது. தவிர, ரூ. 75 லட்சத்தில் 16, ரூ. 50 லட்சத்தில் 78 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.

 

மூலக்கதை