மீண்டும் வருகிறார் பிராவோ | டிசம்பர் 13, 2019

தினமலர்  தினமலர்
மீண்டும் வருகிறார் பிராவோ | டிசம்பர் 13, 2019

புதுடில்லி: விண்டீஸ் வீரர் டுவைன் பிராவோ மீண்டும் சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டிகளில் பங்கேற்கும் எண்ணத்தில் உள்ளார்.

விண்டீஸ் அணி ‘ஆல்–ரவுண்டர்’ டுவைன் பிராவோ 36. கடைசியாக 2016ல் பாகிஸ்தானுக்கு எதிரான அபுதாபி ‘டுவென்டி–20’ போட்டியில் பங்கேற்றார். 2018ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற இவர், லீக் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். ஐ.பி.எல்., தொடரில் சென்னை அணிக்காக பங்கேற்கிறார்.

தற்போது ஓய்வு முடிவை திரும்ப பெற தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து பிராவோ கூறுகையில்,‘‘ ஓய்வு முடிவை திரும்பப்பெற்று, சர்வதேச கிரிக்கெட்டில் பங்கேற்க விரும்புகிறேன். விண்டீஸ் கிரிக்கெட் போர்டு தலைவராக இருந்த டேவ் கேமரூனுக்குப்பதில் ரிக்கி ஸ்கெர்ரிட் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த மாற்றம் மீண்டும் அணிக்காக செயல்பட உத்வேகம் தருகிறது. பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ், கேப்டன் போலார்டுடன் இணைந்து விளையாட விரும்புகிறேன். அடுத்த ஆண்டு ஆஸ்திரேலியாவில் (அக். 18– நவ. 15) நடக்கவுள்ள ‘டுவென்டி–20’ உலக கோப்பை தொடருக்கு தேர்வு செய்யப்பட்டால், முழுமனதுடன் களமிறங்குவேன். இளம் மற்றும் அனுபவ வீரர்கள் இணைந்து, வலுவான அணியை உருவாக்க முயற்சி செய்வோம். ‘டுவென்டி–20’ தவிர மற்ற எவ்வித போட்டிகளிலும் பங்கேற்கும் எண்ணம் இல்லை,’’ என்றார்.

 

மூலக்கதை