இந்திய பொருளாதாரம் ஐசியூ நோக்கி செல்கிறது : மோடி அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்தால் அதிர்ச்சி

தினகரன்  தினகரன்
இந்திய பொருளாதாரம் ஐசியூ நோக்கி செல்கிறது : மோடி அரசின் முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கருத்தால் அதிர்ச்சி

டெல்லி : இந்திய பொருளாதாரம் ஐசியூ நோக்கி செல்வதாக மோடி அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் கூறியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரபல ஹார்வார்டு பல்கலைக்கழகத்தின் சர்வதேச வளர்ச்சி மையத்திற்காக அரவிந்த் சுப்பிரமணியன் தயாரித்துள்ள வரைவு அறிக்கையில் இத் தகவல் இடம் பெற்றுள்ளது. தற்போது இந்திய பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு வழக்கமானது அல்ல என்று கூறியுள்ள அரவிந்த், வாராகடன், பணமதிப்பிழப்பு உள்ளிட்ட காரணங்களால் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய பின்னடைவு என்று குறிப்பிட்டுள்ளார். பணமதிப்பிழப்புக்கு பின் மோசமாக பாதிக்கப்பட்ட ரியல் எஸ்டேட் துறையில் இருந்து திருப்பி செலுத்தப்படாத கடன் மட்டும் 5 லட்சம் கோடி என்று கூறியுள்ள அரவிந்த், இதில் 50% வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு செல்ல வேண்டியது என்பதால், அந்த நிறுவனங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் மாத நிலவரப்படி, நாட்டின் முக்கிய 8 நகரங்களில் மட்டும் 10 லட்சம் கோடி மதிப்புள்ள குடியிருப்புகள் விற்கப்படாமல் தேங்கி இருப்பதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார். மத்திய அரசின் சார்பு நிறுவனமான ஐஎல் அண்ட் எப்எப் கடனில் மூழ்கிய பிறகே ரியல் எஸ்டேட் துறை மோசமான நிலையில் இருப்பது தெரிய வந்துள்ளது. இதனால் கடந்த ஆண்டு 20 லட்சம் கோடி ரூபாய் வரை நிதி நிறுவனங்களுக்கு கடன் கொடுத்த வங்கிகள், நடப்பு நிதியாண்டில் கடன் கொடுப்பதை கிட்டதட்ட முற்றிலும் நிறுத்திவிட்டதாக அரவிந்த் சுப்பிரமணியம் கூறியுள்ளார். வாரா கடன், பணமதிப்பிழப்பு போன்றவை இந்திய பொருளாதாரத்தை பின்னோக்கி வேகமாக தள்ளிக் கொண்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ள அவர், விலை உயர்வு மற்றும் கடன் கிடைக்காதது போன்றவை அனைத்து துறைகளிலும் பாதிப்பை ஏற்படுத்தி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது நிலை தொடர்ந்தால் 1991ம் ஆண்டு ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை மீண்டும் ஏற்படும் என்றும் அரவிந்த் சுப்பிரமணியம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மூலக்கதை