பெண்கள் பலாத்காரம் பற்றிய பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: மக்களவையில் கடைசி நாளில் பாஜ கடும் அமளி

தினகரன்  தினகரன்
பெண்கள் பலாத்காரம் பற்றிய பேச்சுக்காக நாட்டு மக்களிடம் ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும்: மக்களவையில் கடைசி நாளில் பாஜ கடும் அமளி

புதுடெல்லி: ‘நாட்டில் எங்கு பார்த்தாலும் ‘ரேப் இன் இந்தியா’வாக இருக்கிறது,’ என்று கூறியதற்காக ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, மக்களவையில் பாஜ எம்பி.க்கள் நேற்று அமளியில் ஈடுபட்டனர். இதனால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் பிரசாரத்தில் சமீபத்தில் நடந்த பலாத்கார சம்பவங்களை குறிப்பிட்டு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, ‘பிரதமர் மோடி ‘மேக் இன் இந்தியா’வை பற்றி பேசுகிறார். ஆனால், நாட்டில் தற்போது எங்கு பார்த்தாலும் பாலியல் பலாத்காரங்கள் நடக்கின்றன. ‘மேக் இன் இந்தியா’வுக்கு பதிலாக ‘ரேப் இன் இந்தியா’வாக நாடு மாறி வருகிறது. இது குறித்து பிரதமர் வாய் திறக்கவில்லை’ என்றார். இந்த பிரச்னையை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரின் கடைசி நாளான நேற்று, மக்களவையில் மத்திய அமைச்சர்களும், பாஜ எம்பி.க்களும் எழுப்பினர். நேற்று காலை மக்களவை தொடங்கியதும் சபாநாயகர் ஓம் பிர்லா, 2001ம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற வளாக தாக்குதலில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தினார்.  இதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணையமைச்சர்  அர்ஜூன் ராம் மேக்வால் பேசுகையில், ‘‘ஜார்க்கண்ட் மாநிலம், கோட்டா மாவட்டத்தில் ராகுல் காந்தி கூறிய கருத்து கண்டனத்துக்குரியது. இது பற்றி பேசுவதற்கு அனுமதி கேட்டு, பாஜ எம்பி.க்கள் பலர் நோட்டீஸ் அளித்துள்ளனர்,” என்றார்.  மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி பேசுகையில், ‘‘தனது பேச்சின் மூலம், பெண்களையும், இந்திய மக்களையும் ராகுல் அவமதித்து விட்டார். அவர் கூறிய கருத்து, ‘பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ய வாருங்கள்’ என்று அழைப்பது போன்று உள்ளது” என்றார் ஆவேசமாக.    நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, மேக்வால் ஆகியோர் பேசியபோது, ‘மக்களவையில் ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும். சாத்வி நிரஞ்சன் ஜோதி, அவைக்கு வெளியே தான் கூறிய கருத்துக்காக இந்த அவையில் மன்னிப்பு கேட்கவில்லையா? அதேபோல், ராகுல் காந்தியும் வெளியில் கூறிய தனது கருத்துக்காக அவையில் மன்னிப்பு கேட்க வேண்டும். திமுக உறுப்பினர் கனிமொழி, தேசியவாத காங்கிரஸ் உறுப்பினர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர், ராகுலின் பேச்சு குறித்து தங்களின் கருத்தை தெரிவிக்க வேண்டும்,’ என்று வலியுறுத்தினர்.  இதைத் தொடர்ந்து, பாஜ.வை சேர்ந்த பெண் எம்பி.க்கள் அனைவரும் எழுந்து நின்று, ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கோஷமிட்டு கொண்டே இருந்தனர். இதனால், அவையில் பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த அமளி நடந்து கொண்டிருந்தபோது, பிரதமர் மோடியும் ராகுல் காந்தியும் அவையில் அமைதியாக அமர்ந்து இருந்தனர். பாஜ எம்பி.க்களின் அமளியால், முதலில் அரை மணி நேரமும், பின்னர் 15 நிமிடங்களும் அவை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய போதும், ராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பிரக்யா சிங் உட்பட 30 பெண் எம்பி.க்கள் அவையில் முழக்கமிட்டனர். இதைத் தொடர்ந்து, அவை நாள் முழுவதும் ஒத்திவைத்து சபாநாயகர் ஓம் பிர்லா உத்தரவிட்டார்.காலவரையின்றி ஒத்திவைப்புராகுல் காந்தியை மன்னிப்பு கேட்க வலியுறுத்தி பாஜ எம்பி.க்கள் செய்த அமளி காரணமாக, மக்களவை 2 முறை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை தொடங்கிய போது சபாநாயகர் ஓம் பிர்லா, இந்த கூட்டத் தொடரில் விவாதிக்கப்பட்ட பல்வேறு பிரச்னைகள் குறித்த விவரங்களை வாசித்தார். ஆனால்,  பாஜ உறுப்பினர்கள் தொடர்ந்து முழக்கமிட்டப்படி இருந்தனர். அதேபோல், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பி.க்களும், முழக்கமிட்டுக் கொண்ட இருந்தனர். இதைத் தொடர்ந்து, அவையை நாள் முழுவதும் ஒத்திவைத்த சபாநாயகர் ஓம் பிர்லா, பின்னர் அவையை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.‘மக்களவையில் இருப்பதற்கு ராகுலுக்கு உரிமையில்லை’ராகுல் காந்தியின்  கருத்து குறித்து மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரும், அவையின் துணைத்  தலைவருமான ராஜ்நாத் சிங் பேசுகையில், “இறக்குமதி நாடாக இருக்கும் இந்தியாவை, ஏற்றுமதி நாடாக மாற்ற வேண்டும் என்பதற்காகவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்ைப வழங்குவதற்காகவும் தான் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி கொண்டு வந்தார். அந்த வார்த்தையை ராகுல் காந்தி தவறாக சித்தரிப்பதை ஏற்க முடியாது.  ராகுல் போன்ற தலைவர்களுக்கு, இந்த அவையில்  இருப்பதற்கு எந்தவித தார்மீக உரிமையும் கிடையாது. அவர் மக்களவையில் மட்டுமல்ல ஒட்டு மொத்த நாட்டிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும்,” என்றார் தேர்தல் ஆணையத்திடம் பாஜ எம்பி.க்கள் புகார்‘ரேப் இன் இந்தியா’ என ராகுல் பேசியது பற்றி தேர்தல் ஆணையத்தில் நேற்று மாலை, மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தலைமையில் பாஜ பெண் எம்பி.க்கள் புகார் அளித்தனர். அதில், ‘பலாத்காரத்தை அரசியல் ஆயுதமாக ராகுல் பயன்படுத்தி உள்ளார். இதன் மூலம், தேர்தல் நடத்தை விதிமுறைகளை அவர் மீறியுள்ளார். மேலும், தனது கருத்தின் மூலம் இந்திய பெண்களின் கவுரவத்துக்கு ஈடு செய்ய முடியாத இழுக்கை ஏற்படுத்தி இருக்கிறார். இதற்காக அவர் மீது தேர்தல் ஆணையம் மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்,’ என கூறப்பட்டுள்ளது.2022ல் புதிய கட்டிடத்தில்நாடாளுமன்றம் நடக்கும்மக்களவை தொடர் நேற்று முடிந்ததை தொடர்ந்து சபாநாயகர் ஓம் பிர்லா அளித்த பேட்டியில், ‘‘நாடாளுமன்றத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக மூன்று இடங்களை அரசு ஆய்வு செய்துள்ளது. நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்படும் 2022ம் ஆண்டில், புதிய கட்டிடத்தில் நாடாளுமன்ற தொடர் நடக்கும். புதிய கட்டிடத்தில் எம்பி.க்கள் தங்களுக்கு தேவையான தகவல்களை ஆன்லைன் மூலம் பெறும் தொழில்நுட்ப வசதியை, தங்கள் இருக்கையிலேயே பெறுவார்கள். 1972ம் ஆண்டுக்கு பிறகு இந்த கூட்டத் தொடரில் தான் 20 நட்சத்திர கேள்விகளுக்கு அமைச்சர்களால் ஒரே நாளில் கேள்வி நேரத்தின்போது பதில் அளிக்கப்பட்டுள்ளது. இது குறுகிய கால தொடராக இருந்தாலும், சிறந்த செயல்திறன் மிக்கதாக விளங்கியது,’’ என்றார்.15 மசோதா நிறைவேற்றம்:நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த மாதம் 18ம் தேதி தொடங்கி நேற்றுடன் இரு அவைகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டன. கூட்டத்தொடரின் கடைசி நாள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து பேட்டி அளித்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி, ‘‘மக்களவை 116 சதவீதமும், மாநிலங்களவை 99 சதவீதமும் ஆக்கப்பூர்வமாக செயல்பட்டுள்ளன. மக்களவையில் 18 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இதில், 14 மசோதாக்கள் மக்களவையிலும், 15 மசோதாக்கள் மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஒட்டு மொத்தமாக இரு அவையிலும் 15 மசோதா நிறைவேறி உள்ளது,’’ என்றார். இந்த கூட்டத் தொடரில் எஸ்பிஜி பாதுகாப்பு, குடியுரிமை மசோதா உள்ளிட்ட முக்கிய மசோதாக்கள்  அறிமுகம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை