தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரசு கட்டுப்பாடு இரண்டாவது எமர்ஜென்சியா? திரிணாமுல் காங். விமர்சனம்

தினகரன்  தினகரன்
தனியார் தொலைக்காட்சிகளுக்கு அரசு கட்டுப்பாடு இரண்டாவது எமர்ஜென்சியா? திரிணாமுல் காங். விமர்சனம்

புதுடெல்லி: தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு மத்திய அரசு கட்டுப்பாடுகளை வலியுறுத்தியுள்ளதை அடுத்து இரண்டாவது எமர்ஜென்சி அமலில் உள்ளதா? என திரிணாமுல் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் டெரக் ஓ பிரைன் விமர்சித்துள்ளார். குடியுரிமை சட்ட திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்களும், வன்முறை சம்பவங்களும் நடந்து வருகின்றது. இது தொடர்பான காட்சிகள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பப்பட்டன. இந்நிலையில் தகவல் மற்றும் ஒளிபரப்பு துறையானது, கடந்த புதனன்று தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடு மற்றும் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதில் தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள், வன்முறையை தூண்டும் வகையிலும், தேசவிரோத மனப்பான்மையை ஊக்குவிக்கும் மற்றும் நாட்டின் ஒருமைப்பாட்டை பாதிக்கும் வகையிலான எதையும் ஒளிப்பரப்பாமல் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் டெல்லியில் நேற்று திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி ெதாடர்பாளர் டெரக் ஓ பிரைன் கூறியதாவது: இந்தியாவில் தணிக்கை நடைபெறுகிறதா? இது இரண்டாவது அவசர நிலை காலமா? இதுபோன்ற அறிவுறுத்தல்களை வழங்குவதன் மூலமாக அரசு ஊடகங்களை அச்சுறுத்துவதற்கு முயற்சிக்கிறது. ெதாலைக்காட்சிகள் தேசவிரோதமான எதையும் ஒளிபரப்பக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஊடகங்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் வாயை அடைப்பதற்கு அரசு முயற்சி செய்கிறது. வங்கதேசத்தின் அமைச்சர்கள் தங்களது இந்திய பயணத்தை ரத்து செய்து விட்டனர். ஜப்பான் பிரதமரும் தனது பயணத்தை ஒத்திவைத்துள்ளார். சர்வதேச அளவில் என்ன நடக்கிறது? என்றார்.

மூலக்கதை