குற்றவாளியின் சீராய்வு மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா தாய் மனு

தினகரன்  தினகரன்
குற்றவாளியின் சீராய்வு மனுவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நிர்பயா தாய் மனு

புதுடெல்லி: தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியின் சீராய்வு மனுவை எதிர்த்து, நிர்பயாவின் தாயார் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். டெல்லி மருத்துவக் கல்லூரி மாணவி நிர்பயா, கடந்த 2012ம் ஆண்டு டிசம்பர் 16ம் தேதி ஓடும் பஸ்சில் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார். குற்றவாளிகள் அவரை கடுமையாக சித்ரவதை செய்து பஸ்சிலிருந்து தூக்கி வீசினர். இதில் படுகாயமடைந்த நிர்பயா, சிகிச்சை பலனின்றி 2 வாரத்துக்கு பின் இறந்தார்.இந்த வழக்கில், 4 குற்றவாளிகளுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2017ம் ஆண்டு தூக்கு தண்டனையை உறுதி செய்தது. இதில் முகேஷ், பவன் குப்தா, வினய் சர்மா ஆகிய 3 பேர் தாக்கல் செய்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தது. இந்நிலையில், குற்றவாளி வினய் சர்மா, தண்டனையை குறைக்கக் கோரிய தனது கருணை மனுவை திரும்ப பெற்றான்.எனவே, தூக்கு தண்டனையை நிறைவேற்ற திகார் சிறை நிர்வாகம் தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், 4வது குற்றவாளி அக்ஷய் குமார் சிங் உச்ச நீதிமன்றத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்துள்ளான். இந்த மனு, வரும் 17ம் தேதி விசாரணைக்கு வர உள்ளது.இந்நிலையில், குற்றவாளியின் சீராய்வு மனுவை எதிர்த்து, நிர்பயாவின் தாயார் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்யப்பட்டது. அதை விசாரித்த  தலைமை நீதிபதி பாப்டே இந்த மனுவும் வரும் 17ம் தேதி விசாரிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.தூக்கிலிட நான் தயார்திகார் சிறையில் மரண தண்டனை கைதிகளை தூக்கிலிடுவதற்கான பணியில் நிரந்தர ஊழியர் யாருமில்லை. இதனால், வேறு சிறைகளின் உதவியை திகார் சிறை நிர்வாகம் நாடி உள்ளது. இந்நிலையில், உத்தரப்பிரதேச மாநிலம், மீரட் சிறையில் உள்ள தூக்கிலிடும் பணியாளர் பவன் ஜல்லாத் அளித்துள்ள பேட்டியில், ‘‘சிறை நிர்வாகம் கேட்டுக் கொண்டால், நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட நான் தயாராக இருக்கிறேன். என்னுடைய அப்பா, தாத்தா இருவருமே இதே வேலையை செய்தவர்கள். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியை படுகொலை செய்த 2 குற்றவாளிகளை தூக்கிலிட்டது எனது தாத்தா பாப்பு ஜல்லாத்.  சிறுவனாக நான் இருந்த போது, 5 தூக்கு சம்பவத்தில் எனது தாத்தாவுக்கு உதவியாக இருந்திருக்கிறேன்,’’ என்றார்.‘தண்டனையை உடனே நிறைவேற்ற வேண்டும்’நிர்பயாவின் பெற்றோர் நேற்று நீதிமன்றத்திற்கு வந்தபோது அவர் அளித்த பேட்டியில், ‘‘வரும் 16ம் தேதியோடு கொடூர சம்பவம் நடந்து 7 ஆண்டுகள் நிறைவடைகின்றன. உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து இரண்டரை வருடமாகிவிட்டது. சீராய்வு மனுவை தள்ளுபடி செய்து 18 மாதமாகிவிட்டது. ஒரு பெண் பலாத்காரம் செய்யப்படும் போது அவளது வாழ்க்கையே முடிந்து விடுகிறது. ஆனால், தண்டனை தரும் நேரத்தில் மட்டும் மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்புகின்றன. இந்த 7 ஆண்டில் எதுவும் மாறவில்லை. இப்போதும் பெண்கள் எரித்து கொல்லப்படுகிறார்கள். அதைப் பார்த்து அரசு அமைப்பு மவுனமாக நிற்கிறது. எனவே, நிர்பயா குற்றவாளின் தூக்கு தண்டனையை உடனடியாக நிறைவேற்ற வேண்டும்,’’ என்றனர்.

மூலக்கதை