குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்? என்னதான் சொல்கிறது ஷரத்துகள்

தினகரன்  தினகரன்
குடியுரிமை மசோதாவுக்கு எதிர்ப்பு ஏன்? என்னதான் சொல்கிறது ஷரத்துகள்

‘இந்தியக் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - 2019’ நாடாளுமன்றத்தில், பலத்த எதிர்ப்புகளுடன் நிறைவேறி இருக்கிறது. இந்த மசோதாவுக்கு வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமின்றி, தமிழகத்திலும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த சட்டத் திருத்த மசோதாவில் அப்படி என்ன சொல்லப்பட்டுள்ளது? இதற்கு ஏன் இவ்வளவு பெரிய எதிர்ப்பு? மாநிலத்துக்கு மாநிலம் அதற்கான காரணங்கள் வேறுபடுகினறன. அதாவது, எனக்கு தண்ணீர் பிரச்னை என்றால், அடுத்த வீட்டுக்காரருக்கு வாய்க்கால் பிரச்னை என்பதுபோல் உள்ளது.இந்தியாவில் முதல் முறையாக 1955ம் ஆண்டில் குடியுரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதில், அண்டை நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், கிழக்கு பாகிஸ்தான் (வங்கதேசம்) ஆகியவற்றில் இருந்து குடிபெயர்ந்து வந்து, இந்தியாவில் 11 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்கள், சமணர்கள், பார்சிகள்,  மற்றும் கிறிஸ்தவர்களுக்கு குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டிருந்தது.அதில் மாற்றம் செய்து குடியுரிமை சட்டத்திருத்த மசோதா-2019 கொண்டு வரப்பட்டுள்ளது. இதில்,  பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறித்தவர்கள் போன்றவர்கள் இந்திய குடியுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்கள் இல்லை என்றாலும், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் தொடர்ந்து வாழ்ந்து வருபவர்களுக்கும் குடியுரிமை வழங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதுதவிர, 2014ம் ஆண்டு டிசம்பர் 31க்கு முன் இந்தியாவில் புகுந்தவர்களுக்கும் குடியுரிமை வழங்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மசோதா சரி. இதில் என்ன பிரச்ைன வந்துவிடப் போகிறது என்று பார்த்தால், அங்குதான் பிரச்னையே வருகிறது. அதாவது, வடகிழக்கு மாநிலங்களில் அண்டை நாடுகளான வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்கள், முஸ்லிம்கள் ஏராளம். இவர்களால் தங்கள் மாநிலத்தின் சுயதன்மை பறிபோகிறது என்பது, அம்மாநில மக்களின் எதிர்ப்பு. இவர்களை நாட்டை விட்டே வெளியேற்ற வேண்டும் என்று அவர்கள் கூறிவரும் நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியதுபோன்று, 5 ஆண்டுகள் தொடர்ந்து வசித்தாலே வங்கதேச இந்துக்களுக்கு கூட குடியுரிமை அளிக்கலாம் என்று மசோதாவில் கூறப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநில மக்களை பொருத்த வரையில், வங்கதேசத்தில் இருந்து வருபவர்கள் இந்துக்களாக, முஸ்லிம்களாகவோ இருந்தாலும் கூட, அவர்கள் வங்கதேசத்தினர் என்ற வெறுப்பு மட்டும்தான் உள்ளது. இதனால் வடகிழக்கு மாநிலங்களில் மசோதாவுக்கு எதிராக மக்கள் கொதித்தெழுந்து போராடுகின்றனர். இன்னொரு விஷயத்தையும் இங்கு கவனித்தாக வேண்டியுள்ளது. அதாவது வங்கதேசத்தில் இருந்து வந்த இந்துக்களுக்கு மட்டுமே இந்திய குடியுரிமை கிடைக்கும். ஆனால், முஸ்லிம்களுக்கு கிடைக்காது. இதனால் வடகிழக்கு மாநிலங்களிலும், மேற்குவங்கத்திலும் நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியாவில் குடியேறி இப்போது பேரன் பேத்திகளை எடுத்துவிட்ட முஸ்லிம்களும் நடுநடுங்கிப்போய் உள்ளனர். இதனால் அவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.வங்கதேசத்தில் இருந்து மேற்கு வங்கத்தில் குடியேறிய முஸ்லிம் இனத்தினர் அதிகளவில் உள்ளனர். இவர்கள் மேற்கு வங்கத்தில் குடியேறி பலப்பல ஆண்டுகள் ஆகிவிட்டாலும், முறையான ஆவணங்கள் இல்லாதவர்கள். இவர்களுக்கு ஆதரவாகத்தான் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குரல் கொடுத்து வருகிறார். அடுத்ததாக, தமிழகத்தில் வசித்து வருபவர்கள் இலங்கை தமிழர்கள். அவர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படுவதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. இதனால்தான் தயாநிதி மாறன் உட்பட திமுக எம்.பி.க்கள் இந்த மசோதாவுக்கு எதிராக பலமாக தங்கள் கருத்தை பதிவு செய்துள்ளனர்.இலங்கை மக்களுக்கு குடியுரிமை வழங்கப்படுமா என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி எம்.பி. ரவிக்குமார் எழுப்பிய கேள்விக்கு மக்களவையில் அளிக்கப்பட்ட பதிலில், ‘‘சட்டப்பூர்வமற்ற முறையில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படாது’’ என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது குடியுரிமை மறுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால்தான் தமிழகத்தில் இந்த மசோதாவுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், மத்திய அரசுக்கு எப்போதும் தலையாட்டும், அதிமுக அரசு, இந்த மசோதாவுக்கும் இலங்கை தமிழர்களை கைவிட்டு வழக்கம்போல் ஆதரவு தெரிவித்துள்ளது.ஏற்கனவே வந்து போனதுகுடியுரிமை சட்டத் திருத்த மசோதா முதல் முதலாக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், மாநிலங்களவையில் நிறைவேற்றப்படவில்லை. அதற்குள் 16வது மக்களவையின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தது. இதனால் மசோதா காலாவதியானது. இதையடுத்து, மீண்டும் இந்த மசோதா மக்களவையிலும், அதைத் தொடர்ந்து மாநிலங்களவையிலும் நிறைவேற்றப்பட்டுள்ளது.* பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம்கள் அல்லாத இந்துக்கள், சீக்கியர்கள், சமணர்கள், பவுத்தர்கள், பார்சிகள் மற்றும் கிறிஸ்தவர்கள் இந்தியக் குடியுரிமை பெறலாம். * முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாவிட்டாலும் கூட, இந்தியாவில் தொடர்ந்து 5 ஆண்டுகள் வசித்து வந்தாலும் இந்திய குடியுரிமை பெறலாம்.* 1955 இந்தியக் குடியுரிமைச் சட்டத்தில் சில சட்டத் திருத்தங்கள் மேற்கொள்ள இந்த மசோதா வகை செய்கிறது.அசாம் கொந்தளிப்புக்கு காரணம் என்ன?* அசாமில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை கடுமையாக எதிர்ப்பது 2 மாணவர் அமைப்புகள்தான். 1. வடகிழக்கு மாணவர் அமைப்பு (என்இஎஸ்ஓ). அனைத்து அசாம் மாணவர் சங்கம் (ஏஏஎஸ்யு).* வங்கதேசத்தில் இருந்து ஏராளாமான இந்துக்கள் குடியேற ஊக்கம் அளிக்கப்படுகிறது. அவர்களுக்கு குடியுரிமை வழங்கினால், எங்களின் உள்ளூர் கலாசாரம் நீர்த்து போய்விடும். மேலும், குறைந்த அளவில் உள்ள வளங்களுக்கு போட்டி அதிகரித்துவிடும் என்பதுதான் இந்த அமைப்புகளின் எதிர்ப்புக்கு முக்கிய காரணங்கள்.  * வங்கதேசம் மற்றும் எல்லை மாநிலங்களான மேகாலயா, அசாம் மற்றும் திரிபுரா ஆகியவற்றில் இருந்து சட்ட விரோதமாக குடியேறுபவர்களால் பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறோம். எங்களை பாதுகாப்பதற்கு பதில், இது போன்ற சட்டவிரோத ஊருடுவல்காரர்கள் அனைவரையும் சட்டப்பூர்வ குடிமக்களாக மாற்ற முயற்சிக்கின்றனர்  என்கிறார் வடகிழக்கு மாணவர் அமைப்பின் தலைவர் சாமுவேல் ஜெய்வா. * போராட்டம் ஒருபுறம் நடந்தாலும், 8 வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த பெரும்பான்மை எம்.பி.க்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.* வங்கதேசத்தில் இருந்து சட்டவிரோதமாக குடியேறியவர்களால் அசாம் மாநிலத்தில் கடந்த 1979 தேர்தலில்  பெரும் பிரச்னை உருவெடுத்தது. இதையடுத்து, 6 ஆண்டுகள் நடந்த போராட்டத்தில் 885 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, 1985ம் ஆண்டு மத்திய அரசு, மாநில அரசு, மாணவர் அமைப்புகளுக்கு இடையே ஓர் உடன்பாடு கையெழுத்தானது. அதன்படி, கடந்த 1971ம் ஆண்டு மார்ச் 25ம் தேதிக்கு பின்னர் அசாமில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை கண்டறிந்து அவர்களை வெளியேற்ற வேண்டும் என்பதுதான் உடன்பாட்டின் முக்கிய அம்சம். மற்ற மாநிலங்களுக்கு இது 1951ம் ஆண்டாக நிர்ணயம் செய்யப்பட்டது.  புதிய சட்டத் திருத்த மசோதா இதை 2014ம் ஆண்டாக நிர்ணயம் செய்து மாற்றி அமைத்துள்ளது. இது, அசாம் உடன்பாட்டை மீறிய செயல் என்பதுதான் போராட்டக்காரர்களின் குற்றச்சாட்டாக உள்ளது.

மூலக்கதை