கொச்சியில் ரோட்டில் குழியால் விபத்து பலியான வாலிபர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது உயர்நீதிமன்றம்

தினகரன்  தினகரன்
கொச்சியில் ரோட்டில் குழியால் விபத்து பலியான வாலிபர் குடும்பத்திடம் மன்னிப்பு கேட்டது உயர்நீதிமன்றம்

திருவனந்தபுரம் : கொச்சியில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக தோண்டப்பட்ட குழியால் ஏற்பட்ட விபத்தில் பலியான வாலிபரின் குடும்பத்திடம் கேரள உயர்நீதி மன்றம் மன்னிப்பு கேட்டது. கொச்சி கூனம்மாவு பகுதியை சேர்ந்தவர் லால். இவர் தையல் தொழிலாளி. இவரது மனைவி நிஷா. இவர்களது மகன் யதுலால் (23). இவர் கொச்சி பாலாரிவட்டத்திலுள்ள ஒரு தனியார் கம்ப்யூட்டர் மையத்தில் படித்து வந்தார். ஏழ்மையான குடும்பம் என்பதால் காலை மற்றும் மாலையில் இவர் ஒரு ஆன்லைன் உணவு நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் கம்ப்யூட்டர் மையத்தில் கட்டணம் செலுத்த யதுலால் பைக்கில் சென்றார். வழியில் ரோட்டில் குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்வதற்காக தோண்டப்பட்டிருந்த குழி அருகே வைக்கப்பட்டிருந்த தடுப்பு வேலியில் பைக் தட்டியது. இதில் அவர் நிலைதடுமாறி  விழுந்தார். இந்த சமயத்தில் பின்னால் வந்த ஒரு லாரி யதுலால் மீது ஏறியது. இதில் பலத்த காயமடைந்த அவர்,  சிகிச்சை பலனளிக்காமல் இறந்தார். குடிநீர் குழாய் உடைப்பை சரிசெய்யாத அதிகாரிகளின் அலட்சியமே வாலிபரின் மரணத்திற்கு காரணம் என பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இந்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க கோரி கொச்சியை சேர்ந்த சமூக ஆர்வலர் ஒருவர் கேரள உயர் நீதிமன்றத்தில் ஒரு பொதுநலன் வழக்கை தாக்கல் செய்தார்.இந்த மனு நேற்று நீதிபதி தேவன் ராமச்சந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது கேரள அரசுக்கு அவர் கடும் கண்டனம் தெரிவித்தார். நீதிபதி தேவன் ராமச்சந்திரன் கூறியதாவது: பலரது அலட்சியம் காரணமாக மிக இளம் வயதில் ஒருவரின் உயிர் பறிபோய் விட்டது. வெட்கி தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு குடும்பத்தின் தூண் சரிந்துவிட்டது. இந்த சமூகத்திற்காக உயிரை இழந்த அந்த வாலிபரின் குடும்பத்தினரிடம் நான் மன்னிப்பு கேட்கிறேன்.சாலையை சரிசெய்ய நீதிமன்றம் பலமுறை உத்தரவிட்டும் எந்த பலனும் ஏற்படவில்லை. அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. காரில் சொகுசாக செல்லும் அதிகாரிகளுக்கு சாதாரண குடிமகனின் எந்த கஷ்டமும் தெரியாது. அதிகாரிகள் மீது இருந்த நம்பிக்கை நீதிமன்றத்திற்கு போய்விட்டது. அந்த வாலிபரின் குடும்பத்தினரிடம் அதிகாரிகள் மன்னிப்பு கேட்கவேண்டும். நீதிமன்றத்தால் உத்தரவு மட்டுமே பிறப்பிக்க முடியும். அந்த உத்தரவை அரசும், அதிகாரிகளும் தான் அமல்படுத்த வேண்டும். தவறு செய்த அதிகாரிகள் மீது அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கூறினார்.

மூலக்கதை