வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ்

தினமலர்  தினமலர்
வளர்ச்சி 5.6 சதவீதம் குறைத்து அறிவித்தது மூடிஸ்

புதுடில்லி:நடப்பு ஆண்டுக்கான, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை, 5.6 சதவீதமாக குறைத்து அறிவித்துள்ளது, ‘மூடிஸ் இன்வெஸ்டார்ஸ் சர்வீஸ்’ நிறுவனம்.

இது குறித்து, இந்நிறுவனம் தெரிவித்துஉள்ளதாவது:நடப்பு ஆண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, 5.6 சதவீதமாக இருக்கும் என குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளது. இது, கடந்த ஆண்டில் இருந்த, 7.4 சதவீதத்தை விட குறைவாகும்.இருப்பினும், பொருளாதார வளர்ச்சி, 2020ம் ஆண்டில், 6.6 சதவீதமாகவும், 2021ம் ஆண்டில், 6.7 சதவீதமாகவும் அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.இருப்பினும், முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், வளர்ச்சி குறைவாகவே உள்ளது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 2018ம் ஆண்டின் நடுப்பகுதியிலிருந்து வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. 2019ல், ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், கிட்டத்தட்ட 8 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக வளர்ச்சி குறைந்துவிட்டது. இது, செப்டம்பர் காலாண்டில், மேலும், 4.5 சதவீதமாக குறைந்து விட்டது.நுகர்வு தேவை குறைந்தது, வேலை வாய்ப்பு வளர்ச்சியில் மந்தம் ஆகியவை இதற்கு காரணமாக அமைந்துஉள்ளது.இவ்வாறு மூடிஸ் தெரிவித்துள்ளது.

மூலக்கதை