ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

தினமலர்  தினமலர்
ஜி.எஸ்.டி., குறித்த செய்திகள் அனைத்தும் யூகங்களே:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டம்

புதுடில்லி:மத்திய அரசு சார்பாக, இதுவரை எடுக்கப்பட்ட பொருளாதார நடவடிக்கைகள் குறித்து விளக்குவதற்காக, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பத்திரிகையாளர்களை சந்தித்தார். அவருடன், தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி.சுப்ரமணியன், வருவாய் துறை செயலர் அஜய் பூஷண் ஆகியோரும் கலந்துகொண்டனர்.
இந்த சந்திப்பில், வெங்காயம் விலை, ஜி.எஸ்.டி., வரி விகித மாற்றம் உள்ளிட்டவை குறித்து எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும் பதில்அளித்தார்.அவர் கூறிய பதில்களில் சில:

* ஜி.எஸ்.டி., விகிதங்களை அதிகரிப்பது குறித்து, என் அலுவலகத்தை தவிர பிற எல்லா இடங்களிலும் பேசுகின்றனர். ஜி.எஸ்.டி., கவுன்சிலுடன், இது குறித்து அமைச்சகம் இன்னும் எந்த பேச்சிலும் ஈடுபடவில்லை. எனவே, தற்போதுள்ளவை அனைத்துமே குழப்பத்தை தரும் யூகங்களே

* வெங்காயம் விலை குறித்து அமைச்சர்கள் குழு பரிசீலனை செய்து வருகிறது. தற்போது படிப்படியாக உற்பத்தியும் அதிகரித்து வருகிறது. வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்கும், பிரச்சனையை தீர்ப்பதற்கும், அரசு தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறது

* பொருளாதார நிலை குறித்த கணிப்புகளில் அரசு ஈடுபட விரும்பவில்லை. ஆனால், தேவைப்படும்போது தலையிடத் தயாராக இருக்கிறது

* திவால் சட்டத்தில், திருத்தங்கள் நிறைவேற்றப்பட்டு, லோக்சபாவில் அறிமுகப்படுத்தப்படும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தலைமை பொருளாதார ஆலோசகர் கே.வி. சுப்ரமணியன், பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதற்காக, இதுவரை எடுக்கப்பட்ட முயற்சிகள் குறித்து தெரிவித்ததாவது:

* வங்கி சாரா நிதி நிறுவனங்கள் மற்றும் வீட்டு கடன் வழங்கும் நிறுவனங்களின் பிரச்னைகளை தீர்ப்பதற்காக, பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், இந்நிறுவனங்களுக்கு, 4.47 லட்சம் கோடி ரூபாய்க்கு அரசு அனுமதி வழங்கியது. இதில் 1.29 லட்சம் கோடி ரூபாய் சொத்துக்களை மீட்பதற்கானதாகும்

* அமைச்சரவை ஒப்புதல் அளித்த இரண்டு நாட்களுக்குள், 7,000 கோடி ரூபாய் மதிப்பிலான, 17 திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது. பகுதி கடன் உத்தரவாத திட்டத்தின் கீழ், அடுத்த இரண்டு வாரங்களில், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்

* முதலீட்டு தரப்பில், முதலீட்டை அதிகரிக்க கடன் விரிவாக்கம், கார்ப்பரேட் வரி மற்றும் வங்கிகளுக்கு மறு மூலதனம் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன

* சந்தையில் பணப்புழக்கத்தை அதிகரிக்க, கடந்த இரண்டு மாதங்களில், 32 மத்திய பொதுத் துறை நிறுவனங்களுக்கான நிலுவைத் தொகையில், 60 சதவீதம் வழங்கப்பட்டு உள்ளது.

* ரிசர்வ் வங்கியின் புதிய வட்டி விகித திட்டத்தின் படி, நவம்பர் 27ம் தேதி வரையிலான காலத்தில், 72 ஆயிரத்து 201 கோடி ரூபாய் மதிப்பிலான, எட்டு லட்சத்துக்கும் மேற்பட்ட கடன்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

* திட்டமிடப்பட்ட மூலதன செலவுக்கான தொகையான, 3.38 லட்சம் கோடி ரூபாயில், 66 சதவீதம் இதுவரை எடுக்கப்பட்டுள்ளது. அரசின் மூலதன செலவுகள், தனியார் முதலீட்டுகள் அதிகரிக்க உதவும்.

* ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்தில், 32 மத்திய பொதுத்துறை நிறுவனங்களுக் கான மூலதன செலவு, 98 ஆயிரம் கோடி ரூபாய்.

* அன்னிய நேரடி முதலீட்டை பொறுத்தவரை, நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டில், 2.49 லட்சம் கோடி ரூபாய் வந்துள்ளது. இதுவே கடந்த நிதியாண்டில், இதே காலத்தில், 2.20 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

* நடப்பு ஆண்டில் கூடுதலாக பெறப்பட்ட வரியில், 1.57 லட்சம் கோடி ரூபாய் திருப்பி வழங்கப் பட்டுள்ளது. இது கடந்த ஆண்டில் 1.23 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது. இதுவும் நுகர்வுக்கு வழிவகுக்கும். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

மூலக்கதை