சஸ்பென்ஸ்! ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் யார்? யார்?

தினமலர்  தினமலர்
சஸ்பென்ஸ்! ஒன்றிய, மாவட்ட ஊராட்சி வேட்பாளர்கள் யார்? யார்?

திருப்பூர்,: 14-ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மனு தாக்கல், நாளை மறுதினத்துடன்(16ம் தேதி) முடிவடைகிறது. திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான வேட்பாளர்கள் யார் என்ற பரபரப்பு நிலவுகிறது.ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான மனு தாக்கல், தற்போதுதான் சூடுபிடித்து வருகிறது.
திருப்பூர் மாவட்டத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, கட்சி சின்னத்தில் போட்டி இல்லை என்றாலும், அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள், மனு தாக்கல் செய்துவிட்டனர். ஊராட்சி தலைவர் வேட்பாளர்களுக்கெதிராக, பல்வேறு கட்சிகளில் அதிருப்தி வேட்பாளர்களும் களமிறங்கியுள்ளனர்.
கடந்த காலங்களில், கட்சி சாராத பிரமுகர்கள்தான், ஊராட்சித் தலைவர் பதவிக்கு அதிகளவில் போட்டியிடுவர். இந்த முறை, அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள்தான், இப்பதவியைக் குறிவைத்து போட்டியிட உள்ளனர்.ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டுகளில் கட்சி சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடலாம்.
இருப்பினும், ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு, வேட்பாளர் அறிவிப்பு தாமதமாகிவருகிறது.திருப்பூர் மாவட்டத்தில், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்கு, கூட்டணிக்கட்சியினருக்கு, அ.தி.மு.க., எந்த வார்டையும் ஒதுக்கவில்லை. தி.மு.க.,வும் இதே பாணியைப் பின்பற்றுமா என்பது விரைவில் தெரிந்துவிடும்.
ஊராட்சி ஒன்றிய வார்டு, மாவட்ட ஊராட்சி வார்டுகளுக்கு, இன்றும், நாளை மறுதினமும், அதிகளவில் வேட்புமனுக்கள் தாக்கலாகும் என எதிர்பார்க்கலாம். வேட்பாளர்கள் யார், யார் என்ற சஸ்பென்ஸ் நீடிப்பதால், உள்ளாட்சித் தேர்தல் மனு தாக்கல் பரபரப்பான கட்டத்தை நெருங்கியிருக்கிறது.

மூலக்கதை