3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி: மெக்சிகோவில் பயன்பாட்டிற்கு வந்தது

தினகரன்  தினகரன்
3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி: மெக்சிகோவில் பயன்பாட்டிற்கு வந்தது

மெக்சிகோ: மெக்சிகோவில் 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகளை கொண்ட உலகின் முதல் குடியிருப்பு பகுதி பயன்பாட்டிற்கு வந்துள்ளது. மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் கையில் கிடைத்த பொருட்களை கொண்டு கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கின்றனர். வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் மிகவும் அவதிக்குள்ளாகும் இவர்களுக்கு உதவி செய்ய முடிவு செய்த நியூ ஸ்டோரி என்ற லாபநோக்கமற்ற நிறுவனம் ஐகான் என்ற கட்டுமான தொழில்நுட்ப நிறுவனத்துடன் இணைந்து புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்துகிறது. அதன்படி 3டி பிரின்டர் மூலம் அச்சிடப்பட்ட வீடுகள் மெக்சிகோவில் தபஸ்கோ மாநிலத்தில் வசிக்கும் ஏழை, எளிய மக்களுக்கு வழங்கப்படவுள்ளன. அமெரிக்காவை சேர்ந்த ஐகான் நிறுவனம் வடிவமைத்து தயாரித்துள்ள வல்கன்  2 என்ற 3டி பிரின்டரானது 3டி முறையில் பிரின்ட் செய்யப்பட்ட 500 சதுரடியில் அமைந்த 2 வீடுகளை முதற்கட்டமாக கட்டியுள்ளது. இந்த 3டி பிரின்டரானது 9 அடி உயரம், 28 அடி அகலம் கொண்ட 2000 சதுர அடி வீடுகளை கட்டும் திறன் பெற்றது என ஐகான் நிறுவனம் தெரிவிக்கிறது. இந்த 33 அடி பிரின்டரானது அச்சு மையை பீழ்ச்சியடிப்பது போல கான்கிரீட் கலவையை வெளித்தள்ளுகிறது. இதையடுத்து, வழக்கமான முறையில் வீடு கட்டுவதை விட இருமடங்கு வேகத்தில் இந்த 3டி பிரின்டர் வீடுகளை கட்டுகிறது. தற்போது கட்டப்பட்டுள்ள இரண்டு வீடுகள் ஒரு சமையலறை, இரண்டு படுக்கை அறைகள், ஒரு கழிவறையை கொண்டது. வழக்கமான கான்கிரீட் கலவையை விட வலிமையான கான்கிரீட் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும், நிலநடுக்கம் தாங்கும் வகையில் இந்த வீடுகள் கட்டப்படுவதாகவும் நியூ ஸ்டோரி தெரிவித்துள்ளது. 2020ம் ஆண்டுக்குள் 50 வீடுகளை கட்டித்தர நியூ ஸ்டோரி திட்டமிட்டுள்ளது.

மூலக்கதை