உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பே பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு வாக்குப்பதிவு

* வரிசையில் வந்து மக்கள் வாக்களிப்பு* ராமநாதபுரம் அருகே பரபரப்புசாயல்குடி: ராமநாதபுரம் அருகே உள்ளாட்சி தேர்தல் பஞ்சாயத்து தலைவர் தேர்வுக்காக, வாக்குச்சீட்டுகளை அச்சடித்து மாதிரி வாக்குப்பதிவு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ராமநாதபுரம் அருகே சுமைதாங்கி ஊராட்சியில் களரி, ஆனைக்குடி, சுமைதாங்கி, கீழச்சீத்தை என 4 கிராமங்கள் உள்ளன. இதற்கு முன்பு நடந்த உள்ளாட்சி தேர்தல்களில்  ஒருமுறைகூட சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர்கள் ஊராட்சி மன்ற தலைவராக தேர்வு செய்யப்படவில்லை. ஆனால் தலைவர் தேர்தலில் இந்த 4 கிராமங்களை சேர்ந்தவர்களும் வாக்களிக்க வேண்டும். இந்த முறை சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்த ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும். இதற்கு அதே கிராமத்தை சேர்ந்த மற்றவர்கள் போட்டியாளராக வரக்கூடாது என கிராம மக்கள் முடிவு செய்தனர். எனவே, உள்ளாட்சி தேர்தல் நடப்பதற்கு முன்பே, சுமைதாங்கி கிராமத்தில் வாக்குப்பதிவு நடத்தி, அதில் தேர்வு செய்யப்படுபவரை கிராமம் சார்பில் ஊராட்சி தலைவர் தேர்தலில் நிறுத்துவது என முடிவு செய்தனர்.இதையடுத்து தனித்தனி சின்னங்கள் கொடுத்து, வேட்பாளர்கள் பெயருடன் வாக்குச்சீட்டுகளை அச்சடித்து வாக்குப்பதிவு நடத்தினர். நேற்று காலை மக்கள் வரிசையில் நின்று வாக்களித்து கொண்டிருந்தனர். தகவலறிந்து அங்கு வந்த திருஉத்திரகோசமங்கை போலீசார், ‘‘வாக்குச்சீட்டுகளை வைத்து தேர்தல் நடத்துவது சட்டம் மற்றும் தேர்தல் விதிகளுக்கு புறம்பானது. தேர்தலை உடனடியாக நிறுத்துங்கள்’’ என்று கூறி வாக்குச்சீட்டுகளை பறிமுதல் செய்தனர். சுமைதாங்கி விஏஓ புகாரின்பேரில் திருஉத்திரகோசமங்கை போலீசார், சுமைதாங்கி கிராமத்தலைவர் பெருமாளின் மகன் முருகவேல், துணைத்தலைவர் முனியாண்டியின் மகன் முருகவேல், வாக்குச்சீட்டு அச்சடிக்க உதவிய சுமைதாங்கியைச் சேர்ந்த கருப்பையா, வேட்பாளர்களாக நின்ற ராமையா, ராஜா, வீரக்குமார், சேதுபாண்டி மற்றும் வாக்குச்சீட்டு அச்சடித்துக் கொடுத்த ராமநாதபுரம் தனியார் அச்சக உரிமையாளர் ராஜா ஆகிய 8 பேர் மீது வழக்குப்பதிந்து, விசாரித்து வருகின்றனர். தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு முன்பே, வாக்குப்பதிவு நடந்த சம்பவம் ராமநாதபுரம் அருகே பரபரப்பை ஏற்படுத்தியது.

மூலக்கதை