லபுசேன் சதம்: ஆஸ்திரேலியா அபாரம் | டிசம்பர் 12, 2019

தினமலர்  தினமலர்
லபுசேன் சதம்: ஆஸ்திரேலியா அபாரம் | டிசம்பர் 12, 2019

பெர்த்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவின் மார்னஸ் லபுசேன் சதம் கடந்தார்.

ஆஸ்திரேலியா சென்றுள்ள நியூசிலாந்து அணி, மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் பகலிரவு போட்டியாக பெர்த்தில் நடக்கிறது. ‘டாஸ்’ வென்ற ஆஸ்திரேலிய அணி ‘பேட்டிங்’ தேர்வு செய்தது.

ஆஸ்திரேலிய அணிக்கு ஜோ பர்ன்ஸ் (9) ஏமாற்றினார். டேவிட் வார்னர் (43) நல்ல துவக்கம் தந்தார். பின் இணைந்த மார்னஸ் லபுசேன், ஸ்டீவ் ஸ்மித் ஜோடி நிதானமாக ரன் சேர்த்தது. அபாரமாக ஆடிய லபுசேன், டெஸ்ட் அரங்கில் தனது 3வது சதமடித்தார். மூன்றாவது விக்கெட்டுக்கு 132 ரன் சேர்த்த போது நீல் வாக்னர் பந்தில் ஸ்மித் (43) அவுட்டானார். டிம் சவுத்தீ ‘வேகத்தில்’ மாத்யூ வேட் (12) போல்டானார்.

முதல் நாள் ஆட்டநேர முடிவில், முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுக்கு 248 ரன்கள் எடுத்திருந்தது. லபுசேன் (110), டிராவிஸ் ஹெட் (20) அவுட்டாகாமல் இருந்தனர். நியூசிலாந்து சார்பில் வாக்னர் 2 விக்கெட் கைப்பற்றினார்.

அலீம் தர் ‘129’

பெர்த் டெஸ்டில் அம்பயராக களமிறங்கிய பாகிஸ்தானை சேர்ந்த அலீம் தர் (129 டெஸ்ட், 2003–2019), டெஸ்ட் அரங்கில் அதிக போட்டிகளுக்கு ஆடுகள அம்பயராக இருந்தவர்கள் பட்டியலில் விண்டீசின் ஸ்டீவ் பக்னரை (128 டெஸ்ட், 1989–2009) முந்தி முதலிடம் பிடித்தார்.

மூலக்கதை