கடைசி ஓவரில் ஏமாற்றிய தமிழகம்: கிருஷ்ணப்பா கவுதம் ‘சுழல் ஜாலம்’ | டிசம்பர் 12, 2019

தினமலர்  தினமலர்
கடைசி ஓவரில் ஏமாற்றிய தமிழகம்: கிருஷ்ணப்பா கவுதம் ‘சுழல் ஜாலம்’ | டிசம்பர் 12, 2019

நத்தம்: கர்நாடகா அணிக்கு எதிரான ரஞ்சி கோப்பை லீக் போட்டியில் கடைசி ஓவரில் ஏமாற்றிய தமிழக அணி 26 ரன் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியடைந்தது. ‘சுழலில்’ அசத்திய கர்நாடகா அணியின் கிருஷ்ணப்பா கவுதம் இரண்டு இன்னிங்சிலும் சேர்த்து 14 விக்கெட் கைப்பற்றினார்.

திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் உள்ள என்.பி.ஆர்., கல்லுாரி மைதானத்தில் தமிழகம், கர்நாடகா அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை முதல் தர கிரிக்கெட் தொடருக்கான ‘பி’ பிரிவு லீக் போட்டி நடந்தது. முதல் இன்னிங்சில் கர்நாடகா 336, தமிழகம் 307 ரன்கள் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் 2வது இன்னிங்சில் கர்நாடகா அணி 8 விக்கெட்டுக்கு 89 ரன் எடுத்திருந்தது. தேவ்தத் (29), ஷரத் (25) அவுட்டாகாமல் இருந்தனர்.

அஷ்வின் ஆறுதல்: நான்காம் நாள் ஆட்டத்தில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த கர்நாடகா அணிக்கு ஷரத் (28), தேவ்தத் (39) ஓரளவு கைகொடுத்தனர். அஷ்வின் ‘சுழலில்’ கிருஷ்ணப்பா கவுதம் (22), டேவிட் மதியாஸ் (22) சிக்கினர். ரோனித் மோர் (0) ஏமாற்றினார்.

இரண்டாவது இன்னிங்சில் கர்நாடகா அணி 151 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்’ ஆனது. தமிழகம் சார்பில் அஷ்வின் 4, விக்னேஷ் 3 விக்கெட் கைப்பற்றினர்.

கவுதம் கலக்கல்: பின், 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய தமிழக அணிக்கு முரளி விஜய் (15) ஏமாற்றினார். அபினவ் முகுந்த் (42) ஆறுதல் தந்தார். கிருஷ்ணப்பா கவுதம் ‘சுழலில்’ பாபா அபராஜித் (0), அஷ்வின் (2), தினேஷ் கார்த்திக் (17), கேப்டன் விஜய் சங்கர் (5), சாய் கிஷோர் (6), சித்தார்த் (20) சரணடைந்தனர். கவுதம் வீசிய ஆட்டத்தின் கடைசி ஓவரில் விக்னேஷ் (4) அவுட்டாக, தமிழக அணியின் ‘டிரா’ வாய்ப்பு வீணானது.

இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 154 ரன்களுக்கு சுருண்டு தோல்வியடைந்தது. முருகன் அஷ்வின் (23) அவுட்டாகாமல் இருந்தார். கர்நாடகா சார்பில் கிருஷ்ணப்பா கவுதம் 8 விக்கெட் கைப்பற்றினார். ஏற்கனவே இவர், முதல் இன்னிங்சில் 6 விக்கெட் வீழ்த்தினார். இவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு நடந்த விஜய் ஹசாரே (பைனல், அக். 25), சையது முஷ்தாக் அலி டிராபி (சூப்பர் லீக், நவ. 21 மற்றும் பைனல், டிச. 1) தொடருக்கான போட்டிகளில் தமிழக அணி, கர்நாடகாவிடம் தோல்வியை தழுவியது. இது, ரஞ்சி கோப்பையிலும் (டிச. 9–12) தொடர்ந்தது தமிழக அணிக்கு சோகமானது.

மும்பை வெற்றி

வதோதராவில் நடந்த ‘பி’ பிரிவு லீக் போட்டியில் மும்பை, பரோடா அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் மும்பை 431, பரோடா 307 ரன்கள் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் மும்பை அணி 409/4 (‘டிக்ளேர்’) ரன்கள் குவித்தது. பின், 534 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் 2வது இன்னிங்சை துவக்கிய பரோடா அணி 224 ரன்களுக்கு ‘ஆல்–அவுட்டாகி’, 309 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

* விஜயவாடாவில் நடந்த ஆந்திரா (211, 314/3 ரன்கள்), ‘நடப்பு சாம்பியன்’ விதர்பா (441) அணிகள் மோதிய ‘ஏ’ பிரிவு லீக் போட்டி ‘டிரா’ ஆனது.

மூலக்கதை