நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு: அடிப்படை உரிமையை மீறியதாக குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு: அடிப்படை உரிமையை மீறியதாக குற்றச்சாட்டு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்ட குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து, உச்ச  நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி வழக்கு தொடர்ந்துள்ளது. பாகிஸ்தான்,  வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து மத துன்புறுத்தல்களால் வெளியேறி  இந்தியா வந்துள்ள இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மை மக்களுக்கு குடியுரிமை  அளிப்பதற்கான சட்டத் திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் மத்திய அரசு நேற்று  முன்தினம் நிறைவேற்றியது. ஜனாதிபதி ஒப்புதலுக்கு பின் இந்த மசோதா விரைவில்  சட்டமாக உள்ளது.   இந்நிலையில், இந்த சட்டத் திருத்தத்தை எதிர்த்து உச்ச  நீதிமன்றத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி, ேநற்று வழக்கு  தொடர்ந்தது. இக்கட்சி  சார்பில் வழக்கறிஞர் பல்லவி பிரதாப் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது: மத்திய அரசு நிறைவேற்றியுள்ள குடியுரியுமை சட்டத் திருத்த மசோதா, இந்திய அரசியலமைப்புக்கு எதிரானது. இந்த சட்டத் திருத்தம் முஸ்லிம்களுக்கு எதிராக இனப் பாகுபாட்டை உண்டாக்கும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ளது.  இந்த சட்டத்தால் இந்துக்கள், சீக்கியர்கள், புத்த மதத்தவர், ஜெயின்கள், பார்சிகள், கிறிஸ்தவர்கள் மட்டுமே பயன் அடைவார்கள். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்,  வங்கதேசத்தில் இருந்து இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் அல்லாத சிறுபான்மை  மக்களுக்கு  மட்டும் இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படுவது அரசியல் சாசனத்தை மீறிய  செயலாகும்.  அண்டை நாடுகளாக ஆப்கான், பாகிஸ்தானை சேர்ந்த அகமதியர்கள், ஷியா, ஹசாராஸ் ஆகியோரை மசோதாவில் இருந்து விலக்கியது தொடர்பாக எந்த விளக்கத்தையும் மத்திய அரசு தரவில்லை. இந்த சட்டம் எந்த நிலையான கொள்கையையும் கொண்டிருக்கவில்லை. இந்த சட்டத் திருத்தம், இந்திய அரசியலமைப்பின் அடிப்படை  உரிமையான சமத்துவ கொள்கையை மீறியுள்ளது. எனவே, இந்த சட்ட திருத்தத்தை  செயல்படுத்த இடைக்கால தடை விதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.‘காங்கிரசும் வழக்கு தொடரும்’‘குடியுரிமை சட்டத் திருத்த  மசோதாவை எதிர்த்து வழக்கு தொடர்வீர்களா?’ என காங்கிரஸ் மூத்த தலைவரான மணீஷ்  திவாரியிடம் நேற்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்த பதிலில்,  ‘‘குடியுரிமை சட்ட திருத்தம் முற்றிலும் சட்ட விரோதமானது. இதை எதிர்த்து  விரைவில் உச்ச நீதின்றத்தில் வழக்கு தொடரப்படும். இந்த மசோதாவை எதிர்த்து  வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்த 10க்கும் மேற்பட்ட அமைப்புகள், எங்கள் சட்ட  நிபுணர்களை அணுகியுள்ளன. எனவே, நாங்கள் நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தில்  வழக்கு தொடர்வோம். இந்த மசோதா ஒருநாள் கூட நிலைத்து நிற்காது,’’ என்றார்.

மூலக்கதை