நாட்டுக்கு பயன் அளிக்கும் கடின முடிவுகள் எடுப்பதை காங். எப்போதுமே தவிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தினகரன்  தினகரன்
நாட்டுக்கு பயன் அளிக்கும் கடின முடிவுகள் எடுப்பதை காங். எப்போதுமே தவிர்த்தது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு

தன்பாத்: ‘‘நாட்டின் நலனுக்கு பயன் அளிக்கக் கூடிய கடினமான முடிவுகள் எடுப்பதை, காங்கிரஸ் எப்போதுமே தவிர்த்து வந்துள்ளது,’’ என்று பிரதமர் மோடி குற்றம்சாட்டியுள்ளார். ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கு 5 கட்டங்களாக தேர்தல்   நடத்தப்பட்டு வருகிறது. இதில், முதல் கட்டத் தேர்தல் கடந்த மாதம் 30ம் தேதியும், 2ம்  கட்டத் தேர்தல் கடந்த 7ம் தேதியும் நடந்தன. 3ம் கட்டத் தேர்தல்  நேற்று நடந்தது. 4 மற்றும் 5ம் கட்டத் தேர்தல் முறையே வரும் 16, 20ம் தேதிகளில் நடைபெற உள்ளன. 5 கட்டத் தேர்தலிலும் பதிவாகும்  வாக்குகள் வரும் 23ம் தேதி  எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.  இந்நிலையில், 4ம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள தன்பாத் தொகுதியில் நடந்த பிரசாரக் கூட்டத்தில், பாஜ வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பேசியதாவது:வாக்கு  வங்கியைப் பற்றி நான் ஒரு போதும் கவலைப்பட்டது இல்லை. ஆனால், மக்களின்  நலனுக்காக உழைப்பதில் முழு நம்பிக்கை வைத்துள்ளேன். சர்ச்சைக்குரிய  ராமஜென்ம பூமி விவகாரத்தை காங்கிரஸ் பல ஆண்டுகளாக வேண்டும் என்றே கிடப்பில் போட்டது. ஏனென்றால், தேசத்தின் நலன் தொடர்பான முடிவுகளை எடுப்பதை, காங்கிரஸ் 2வது இடத்தில்தான் வைத்திருந்தது. தேச நலன் குறித்த கடினமான முடிவுகள் எடுப்பதை காங்கிரஸ்  எப்போதுமே  தவிர்த்து விட்டது. ஜார்க்கண்ட் மாநிலம்  உருவாக்கப்படுவதை கடந்த 50 ஆண்டுகளாக காங்கிரஸ் கிடப்பில்  போட்டிருந்தது. ஆனால், வாஜ்பாய் தலைமையிலான பாஜ அரசு பதவியேற்றதும்,   ஜார்க்கண்ட் மாநிலம் உருவாக்கப்பட்டது. நமது தாய்மார்கள்,  சகோதரிகள் எதிர்கொள்ளும் தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காண ஜல்ஜீவன் திட்டம்  இந்தாண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இப்பிரச்னைக்கு விரைவில் சுமூக  தீர்வு காணப்படும். பாஜ தலைமையிலான மத்திய, மாநில அரசுகள் எண்ணற்ற மக்கள்  நலத் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இவ்வாறு மோடி பேசினார்.

மூலக்கதை